மக்களுடைய விவசாயம் பாதிக்கப்படும் : சட்டத்தரணி சுகாஷ்
பொன்னாவெளி என்பது நீர்வளம், நிலவளம் பொருந்திய ஒரு பிரதேசம் இந்தப் பிரதேசத்திலே சுண்ணக்கல் அகழப்படுமாக இருந்தால் இரண்டு ஏக்கருக்கும் அதிகமான பிரதேசத்தில் கடல்நீர் உள்ளே வரும், வெள்ளப் பெருக்கு ஏற்படும், மக்களுடைய நிலங்கள் உவராகும். ஆகவே விவசாயமும் பாதிக்கப்படும், கரையோர உற்பத்திகளும் பாதிக்கப்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - பூநகரி, பொன்னாவெளி பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கை. நீங்கள் எங்களது நிலத்தை அழித்தது போதும். நீங்கள் எங்களது உறவுகளை கடத்தி, காணாமல் ஆக்கி, அரசோடு சேர்ந்து தமிழ் இனத்தை காட்டிக் கொடுத்தது போதும். உங்களுடைய துரோகத் தனத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இந்த மக்களையும் எங்களையும் தாண்டி நீங்கள் இந்த சுண்ணக்கல் பிரதேசத்திற்குள் கால் பதிப்பீர்களாக இருந்தால் தமிழ் மக்களை திரட்டி உங்களுடைய சிறீதர் தியேட்டரை முற்றுகையிடுவோம்.
ஏனென்றால் இது பொன்னாவெளியினுடைய வாழ்வாதாரம், கிளிநொச்சியுடைய அடையாளம், தமிழ் தேசத்தினுடைய இருப்பு. உங்களுக்கு கிடைக்கக்கூடிய அற்ப சொற்ப சலுகைகளுக்காக எங்களுடைய இனத்தை அடகு வைக்காதீர்கள். தமிழ் மக்களோடு மோதாதீர்கள் டக்ளஸ் தேவானந்தா அவர்களே. அரசியல் அநாதையாகிப் போய் இருக்கின்றீர்கள்.
வெறும் இரண்டு ஆசனங்களோடு பாராளுமன்றத்தில் சுருங்கி போய் இருக்கின்றீர்கள். உங்களுடைய மிச்ச சொச்ச எதிர்ப்பையும் எதிர்கால தேர்தலில் இந்த மக்கள் தீர்மானிப்பார்கள். ஆகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே உங்களுக்கு நாங்கள் விடுகின்ற இறுதி எச்சரிக்கை, நீங்களும் இந்த மண்ணை விட்டுப் போக வேண்டும். இந்த சுண்ணக்கல் அகழ்வையும் நிறுத்த வேண்டும்.
இல்லையேல் இந்த மக்களோடு நாங்களும் சேர்ந்து ஜனநாயகத்தின் உச்சம் வரை சென்று போராடுவோம். எங்களுடைய பிணங்களை தாண்டித்தான் இங்கே சுண்ணக்கல் அகழப்படும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |