சீனியின் கையிருப்பு தொடர்பில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிவிப்பு
நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சீனி அரசுடமையாக்கப்பட்டதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் ஒரு கிலோகிராம் சீனிக்காக அறவிடப்பட்ட 50 ரூபாய் என்ற இறக்குமதித் தீர்வை வரியானது, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், 2020 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல், 25 சதமாகக் குறைக்கப்பட்டது.
அன்றைய நாளில், இலங்கயைில் 88878 மெட்ரிக் தொன் சீனி கையிருப்பில் காணப்பட்டது. இந்த நிலையில், 2020 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் 2021 ஜூன் 30ஆம் திகதி வரை, 584000 மெட்ரிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
உள்நாட்டின் மாதாந்தச் சீனித் தேவையின் அளவு 35000 மெட்ரிக் தொன் ஆகும். இருப்பினும், வருடாந்தச் சீனித் தேவைக்கு மேலதிகமாக சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நாட்டுக்குள் சீனிக்குத் தட்டுப்பாடு நிலவுவதான மாயையை உருவாக்கி, நுகர்வோரை சிரமத்துக்கு உட்படுத்தி, அதிக விலைக்கு சீனியை விநியோகிக்கும் முயற்சியொன்று, கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டமையைக் காணக்கிடைத்தது.
பொது மக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் ஒருவரை நியமித்து இலங்கை ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கமைய நான்கு நிறுவனங்களுக்கு சொந்தமான ஐந்து களஞ்சியசாலைகள் சுற்றிவளைக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29900 மெட்ரிக் தொன் சீனி கண்டுபடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சீனித் தொகையை, கட்டுப்பாட்டு விலையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



