கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்வெட்டு
தேசிய மின்சார அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மையின் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (30) மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடிய விரைவில் மின்சாரத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இயந்திர கோளாறு
அமைப்பைச் சமநிலைப்படுத்தி நிலைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக மின் விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும், அதை மீட்டெடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், வெசாக் பண்டிகைக் காலத்தில் தேசிய மின் கட்டமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் சீரான செயல்பாட்டை உறுதி செய்யும் பொருட்டு, கூரை மேல் சூரிய மின் தகடு உரிமையாளர்கள் இன்று பிற்பகல் 3:00 மணி வரை தங்களது சூரிய மின் அமைப்புகளைத் தாங்களாகவே முன்வந்து அணைத்து வைக்குமாறு கோரப்பட்டிருந்தது.
அமைப்பில் கணிசமாகக் குறைந்த மின்சாரத் தேவை காணப்படுவதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலைத்தன்மையைப் பேணுவதற்கு கவனமான மின்கட்டமைப்பு மேலாண்மை அவசியமாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.