பிரித்தானியாவில் பெட்ரோல் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு!
பிரித்தானியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோலின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பிரித்தானியாவில் பெட்ரோலின் தற்போதைய விலை லீட்டருக்கு 1.36 பவுண்ட்ஸை எட்டியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்க புள்ளிவிவரங்களின் படி, பெட்ரோல் விலை ஒரு வாரத்தில் லீட்டருக்கு 0.91p உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த வாரம் 135.19 பவுண்ட்ஸாக காணப்பட்ட பெடரோல் விலை இன்றைய தினம் 136.1 பவுண்ட்ஸாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டீசல் விலையும் டீசல் 1.7p ஆக உயர்ந்து 137.9 பவுண்ட்ஸில் இருந்து 139.2 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2013ம் ஆண்டுக்கு பின்னர் மிக பெட்ரோல் விலை அதிக அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, பிரித்தானியாவில், கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்ததுடன், சில எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது.
தொற்றுநோய் மற்றும் பிரெக்சிட் உள்ளிட்ட பல காரணிகளால் பிரித்தானியாவில் லாறி ஓட்டுநர்கள் பணியில் கடும் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தற்போது எரிபொருள் மற்றும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் சுமார் 100,000 ஓட்டுனர்கள் தேவை என அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தற்போதைய நிலையில் மொத்தம் 127 ஓட்டுநர்கள் மட்டுமே பிரித்தானியாவுக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் இன்று பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
“பிரித்தானியாவுக்கு வருவதற்கு விருப்பம் இருக்கும் ஓட்டுநர்களின் விபரங்களை வழங்குமாறு போக்குவரத்துத் துறையினரிடம் விபரம் கேட்கப்பட்டது. அதன்படி இதுவரை மொத்தம் 127 ஓட்டுநர்கள் மட்டுமே பிரித்தானியாவுக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலமாக உலகம் முழுவதும் ஓட்டுநர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது” என அவர் கூறியுள்ளார்.