சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களில் முன்னேற்றம் - நிதி அமைச்சு
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு தேவையான நிதி, நாணய மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிய சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களின் போது இலங்கை அதிகாரிகள் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிதி அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் மைக்ரோ பொருளாதார சீர்திருத்த திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் விரிவாக்கப்பட்ட நிதியளிப்பு வசதியை (EFF) உள்ளிடும் நோக்கில் இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பம்
ஏப்ரல் 2022 இல் சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்புகளுக்குப் பிறகு, மே மாத தொடக்கத்தில் ஒரு மெய்நிகர் சந்திப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து ஜூன் 20 முதல் 30 வரை பணியாளர் நிலை ஒப்பந்தத்தை (SLA) அடையும் நோக்கில் விவாதங்கள் தொடர்ந்தன.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த தேவையான நிதி, பணவியல் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிய விவாதத்தின் போது கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது.
சமூக அமைதியின்மை மற்றும் அரசியல் ஸ்திரமின்மை மே மாதத்திலிருந்து நிர்வாகத்தில் பல மாற்றங்களுக்கு வழிவகுத்தது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.
எனினும், புதிய அரசாங்கம் உருவானவுடன், இலங்கை அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான தொழில்நுட்ப கலந்துரையாடல் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.