மேன்முறையீட்டு நீதிபதிகளின் நியமனத்துக்காக நால்வரின் பெயர் பரிந்துரை
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தற்போதுள்ள நான்கு வெற்றிடங்களை நிரப்புவதற்காக மூத்த மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தலைமை நீதியரசர் முர்து பெர்னாண்டோ குறித்த நீதிபதிகளின் பெயர்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) அனுப்பியுள்ளார்.
அதன்படி, கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திர, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கே. பிரியந்த பெர்னாண்டோ, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பிரேம சங்கர் மற்றும் கொழும்பு சிவில் மேல் நீதிமன்ற நீதிபதி பிராங்க் குணவர்தன ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அரசியலமைப்பு பேரவை குழு
இதற்கிடையில், வெற்றிடங்களை நிரப்புவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக மூத்த துணை மன்றாடியார் நாயகம் லக்மாலி கருணாநாயக்க மற்றும் சுதர்சன டி சில்வா ஆகியோரின் பெயர்களை சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, இந்த வேட்பாளர்களில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பணியாற்ற பொருத்தமானவர்கள் என்று தான் நம்பும் சிலரை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி, அந்த பெயர்களை, அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதலுக்காக அனுப்புவார்.
இந்தநிலையில் அரசியலமைப்பு பேரவை குழு, 2025 பெப்ரவரி 5 ஆம் திகதி கூடவுள்ளது.
நீதிபதிகளின் நியமனம்
இதற்கிடையில், சட்ட சவாலை எதிர்நோக்கியிருந்த, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஜனவரி 31 முதல் ஓய்வுக்கு முந்திய விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுப்பில் செல்வதற்கு முன்னர், அவர் தம்முடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடந்த வெள்ளிக்கிழமை ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். இந்த சூழ்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு விரைவில் ஒரு பதில் தலைவர் நியமிக்கப்படவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |