மட்டக்களப்பில் விபத்தில் உயிரிழந்த ஆசிரியை - நீதி கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு - திமிலைதீவு கனரக வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த ஆசிரியை மதிவதனி கமலநாதன் மரணத்திற்கு நீதி கோரியும், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கோரியும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்பாட்டமானது, இன்று(12.10.2026) வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னாள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிக்கான மக்கள் குரல் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை
இதன்போது, கனரக வாகனங்களின் கட்டுபாடற்ற போக்குவரத்தை நிறுத்து, மனித உயிர்களை காப்பாற்று, உயிரிழப்பு ஏற்படும் வரை காத்திருக்காதே, இப்போதே நடவடிக்கை எடு என சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஆசிரியை மதிவதனி கமலநாதன் மரணத்திற்கு நீதி கோருதல் மற்றும் மண்முனை மேற்கு பிரதேசத்தில் மணல் அகழ்வு நடவடிக்கைகளையும் கனரக வாகனப் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தி, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு எனும் தலைப்பிலான மனு ஒன்றை வவுணதீவு பிரதேச செயலாளரிடம் கையளித்த பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து களைந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

