மாணவர்களுக்கு சைபர் பீரியட் என்ற வகுப்பை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை
மகாராஷ்டிராவில் உள்ள பாடசாலைகளில் இணையவழி பாதுகாப்பு பற்றி மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வாராந்த சைபர் பீரியட்" (Cyber Period) என்ற வகுப்பை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பொலிவூட் நடிகர் அக்ஷய் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய அக்ஷய் குமார், தன் குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.
அவரது மகள் ஒன்லைனில் அந்நியர்களுடன் ஒரு வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவளுக்கு ஒரு செய்தி வந்துள்ளது. அதில், 'நீங்கள் ஆணா, பெண்ணா?' என்று கேட்கப்பட்டுள்ளது.
சைபர் பீரியட்
அதற்கு அவள் 'பெண்' என்று பதிலளித்த பிறகு, 'நிர்வாடமாக புகைப்படங்களை அனுப்ப முடியுமா?' என்று அந்த நபர் கேட்டுள்ளார்.
உடனே தனது மகள் அந்த கேமை நிறுத்திவிட்டு, தன் தாயிடம் நடந்ததைச் சொன்னதாக அவர் கூறினார்.
"இப்படித்தான் விஷயங்கள் தொடங்குகின்றன. இதுவும் ஒரு இணைய குற்றமே," என்று கூறிய அக்ஷய் குமார், விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அவர் மகாராஷ்டிர முதலமைச்சரிடம், "நம் மகாராஷ்டிரா மாநிலத்தில், 7, 8, 9, மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரந்தோறும் ஒரு 'சைபர் பீரியட்' இருக்க வேண்டும். அதில் குழந்தைகளுக்கு இதுபற்றி விளக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.
எச்சரிக்கை
"இந்தக் குற்றமானது தெருக்களில் நடக்கும் குற்றங்களைவிட பெரிதாக வளர்ந்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துவது மிகவும் அவசியம்," என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
சிறார்களை குறிவைக்கும் ஒன்லைன் தொல்லைகள் மற்றும் சுரண்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், அக்ஷய் குமாரின் இந்தக் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவில் சைபர் குற்ற வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், குறிப்பாக விளையாட்டு தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



