முல்லைத்தீவில் புனரமைப்பு செய்யப்படாத விளையாட்டு மைதானம் : சுட்டிக்காட்டும் மாணவர்கள்
முல்லைத்தீவு (Mullaitivu) கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தினை விளையாட்டுக்களுக்கு பயன்படுத்த முடியாத சூழல் இருப்பதாக பாடசாலையில் விளையாட்டுத் துறைகளில் ஈடுபாடுடைய மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விளையாட்டில் திறமை மிக்க பல மாணவர்கள் உள்ளபோதும் அவர்களைப் பயிற்றுவிப்பதற்கு விளையாட்டு மைதானம் இல்லாமை பெரும் குறையாக இருப்பதாக பயிற்றுவிப்பாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
40 வருடங்களாக இந்த விளையாட்டு மைதானம் மணலாகவே இருப்பதாக பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம் சார்பாக பேசவல்ல ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மைதானத்தின் இன்றைய நிலை
பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த விளையாட்டு மைதானம் பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மைதானம் முழுமைக்கும் மணலாக இருப்பதால் விளையாட்டுச் செயற்பாடுகளின் போது மாணவர்களால் நேர்த்தியான பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை.
பொதுவாக ஒரு விளையாட்டு மைதானத்தின் நிலம் உறுதியாக இருப்பதோடு அதன் மீது புற்கள் வளர்க்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் போட்டிகளிற்காக மணல் தரையினைக் கொண்ட மைதானத்தில் எப்படி பயிற்சியளிக்க முடியும்? அப்படியான பயிற்சிகளைப் பெற்ற மாணவர்களால் போட்டிகளில் பங்கெடுக்கும் ஏனைய போட்டியாளர்களுக்கு நிகராக ஈடுகொடுத்து விளையாடுவதில் அதிக கடினங்களை எதிர்கொள்ள நேரும் என விளையாட்டுக்களில் ஆர்வமுள்ள உதைபந்தாட்ட வீரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கொக்குத்தொடுவாய்ப் பகுதி வாழ் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என எல்லோருக்கும் இது தான் பிரதான விளையாட்டு மைதானமாக உள்ளது.
தேசிய மட்டம்
சுற்று வேலி அமைக்கப்பட வேண்டியதோடு மைதானத்தின் நிலமும் களிமண் பரவப்பட்டு உறுதியான நிலமாக மாற்றப்பட வேண்டும்.இந்த தேவை அவசியமானதாக இருக்கின்ற போதும் இதனை முன்னெடுத்து நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிதி நெருக்கடி இருப்பதாக கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் குறிப்பிடுகின்றார்.
கொக்குத்தொடுவாயில் உள்ள குளங்களில் இருந்து களி மண்ணினைப் பெற முடியும்.கிராமத்தில் உள்ள உழவியந்திரங்களையும் உதவிக்குப் பெற முடியும்.இருந்தும் இந்த திட்டத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்கான குறைந்தபட்ச நிதியாவது தேவைப்படும் நிலையில் அது இல்லாதது எந்தவொரு முன்னேற்றகரமான நகர்வுகளையும் செய்ய முடிவதில்லை என்ற நோக்கில் அவர் தொடர்ந்து தன் கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.
தேசிய மட்டத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியொருவர் பாடசாலையில் இருப்பது தொடர்பிலும் தெரிவித்துள்ளார்..
என்ன செய்யலாம்
கொக்குத்தொடுவாயினைச் சேர்ந்த புலம்பெயர்ந்து வாழும் புலம்பெயர் சமூக ஆர்வலர் ஒருவர் இது தொடர்பில் குறிப்பிடும் போது தன் போன்ற பலர் ஒன்றிணைந்து செயலாற்ற முடிந்தால் தன் உழைப்பில் ஒரு பங்கினை மைதான அபிவிருத்திக்கு வழங்க முடியும்.
கொக்குத்தொடுவாயினை மட்டும் சேர்ந்தவர்கள் என்று நோக்காது ஈழத்தின் ஒரு பாடசாலை என்று நோக்கும் போது புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் ஒன்றிணைந்த முயற்சியாக கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தினைப் புனரமைத்துக் கொடுக்க முடியும் என கொக்குத்தொடுவாயினைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
சிறப்பான களங்களை அமைத்துக் கொடுக்கும் போது ஈழத்தின் இளைய சந்ததி திறமைகளை வளர்த்துக்கொண்டு பலமான திறமையான சமூகமாக எதிர்காலத்தில் தோற்றம் பெற முனையும் என்பது அவர்களிருவரதும் கருத்துக்களின் சாரமாக அமைந்துள்ளது.
சமர்க்கள நாயகனைத் தந்த பூமி
ஈழ விடுதலைப்போராட்டத்தின் வீரமிகு செயல் திறன் மிக்க சமர்க்கள நாயகனாக திகழ்ந்த பிரிகேடியர் பால்ராஜ் பிறந்த பூமி கொக்குத்தொடுவாய் என ஈழப்போர் பற்றிய தேடல்களில் அதிகம் ஈடுபட்டுவரும் கல்விப் புலம் சார்ந்த ஒருவரின் கருத்தாக உள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் துயர் மிகு நிகழ்வுகளில் நீண்டகால இடப்பெயர்வைச் சந்தித்த மக்களாகவும் இலங்கை இராணுவத்தின் அதிகளவான அடாவடிகளை எதிர்கொண்டிருந்த மக்களைக் கொண்ட பூமியாகவும் கொக்குத்தொடுவாய் அமைவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கொக்குத்தொடுவாய் வாழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதில் காட்டும் நாட்டம் ஈழப்போராட்டத்தின் தூண்களில் ஒன்றாக மிளிர்ந்த குடாரப்பு தரையிறக்கத்தின் நாயகனாக பேசப்படும் அந்த பெரும் தளபதிக்குச் செய்யும் நன்றிக்கடனாகவே தான் கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
விரைவில் தீர்வுகள் வருமா?
கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு அவசியம் என்பது உணரப்பட்ட போதும் அதனைச் சீர்செய்து விரைவாக மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளர்த்துக்கொள்ள அவர்களிடம் கையளிக்க வேண்டும்.
அதற்கு தேவையான எல்லா வழிவகைகளையும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் கரிசனை கொண்டு செயலாற்ற வேண்டும் என்று கொக்குத்தொடுவாய் வாழ் விளையாட்டுத் துறையினைச் சர்ந்தவர்களின் விருப்பக் கோரிக்கையாக அமைவது இங்கே நோக்கத்தக்கது.
கல்வியமைச்சினால் பாடசாலையின் உட்கட்டுமான அபிவிருத்திகளுக்கென ஒதுக்கப்படும் நிதி விடயங்களிலும் கவனம் செலுத்தும் போது விரைவான தீர்வொன்றை பெற முடியும் என்பதில் ஐயமில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |