மட்டக்களப்பில் டெங்கு தடுப்பு உதவியாளர்கள் போராட்டம்: சாணக்கியன் வழங்கிய உறுதிமொழி
அகில இலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு டெங்கு தடுப்பு உதவியாளர்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று(14.07.2023) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
கடந்த ஏழு வருடங்களாக தாங்கள் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றிவரும் நிலையில் தம்மை நிரந்தர நியமனங்களுக்குள் உள்வாங்க வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“எங்கள் வேலையை நிரந்தரமாக்கு, 22000 ரூபா எமது வாழ்வாதாரத்திற்கு
போதாது, டெங்குவை கட்டுப்படுத்த புகையூட்டலையும் களப்பணியையும் 07வருடமாக
முன்னெடுத்துவருகின்றோம், கோவிட் தொற்று காலத்தில் இரவு பகல் பாராது எமது பணியை முன்னெடுத்தோம், அரசே எங்களை நிரந்தர நியமனம் செய்” போன்ற சுலோகங்களை தாங்கியவாறு’ இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி உறுதிமொழியை காப்பாற்றுவார் என நம்பிக்கை
தற்போதைய ஜனாதிபதி ரணில் பிரதமராகயிருந்த காலத்திலேயே தமக்கு நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் நிரந்தரமாக்கப்படுவோம் என்று உறுதிமொழிகள் வழங்கப்பட்டதாகவும் தற்போதைய ஜனாதிபதி அந்த உறுதிமொழியை காப்பாற்றுவார் என்று நம்புவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
கோவிட் அச்சுறுத்தல் காலத்தில் தாங்கள் அர்ப்பணிப்புகளுடன் கடமைகளை முன்னெடுத்த
நிலையில் இதன்போது ஒரு டெங்கு தடுப்பு உதவியாளரும் உயிரிழந்ததுடன் அவரது
குடும்பத்திற்கும் இதுவரையில் எந்த உதவியும் வழங்கப்படவில்லையெனவும் இதன்போது
கவலை தெரிவிக்கப்பட்டது.
தமது நியாயமான கோரிக்கையை நிறைவேறும் வரையில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவவும் இதன்போது போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினால் 22000 ரூபாவினை கொண்டு குடும்பத்தினை நடாத்தமுடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும் அரசாங்கம் தங்களை கண்கொண்டு பார்க்கவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள டெங்கு தடுப்பு உதவியாளர்கள் கலந்துகொண்டதுடன் குறித்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு தனது ஆதரவினை வழங்கியதுடன் கலந்துரையாடலையும் நடத்தினார்.
சாணக்கியன் ஆதரவு
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், குறித்த டெங்கு தடுப்பு உதவியாளர்களை நிரந்தர நியமனங்களுக்குள் உள்வாங்குமாறு நான் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றேன்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பல தடவைகள் பேசியுள்ளதுடன் சுகாதார அமைச்சின் குழுக்கூட்டத்திலும் இதனை வலியுறுத்தியுள்தாக குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் இந்த நியமனம் நல்லாட்சி அரசாங்க காலத்தில் வழங்கப்பட்ட நியமனம் என்ற காரணத்தினால் இவர்களை நிரந்தர நியமனத்தில் உள்வாங்குவதில் அரசியல் மயப்படுத்தும் வேலைகளை கடந்த ஆட்சியாளர்கள் செய்து அவர்களுக்கான நியமனங்களை வழங்கமறுத்தனர்.
பின்னர் இது தொடர்பில் நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்த நிலையில் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல இவர்களுக்கான நியமனங்களுக்காக தான் போராடப்போவதாகவும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |