மன்னார் மக்களின் போராட்டத்தை மதிக்க வேண்டும் - மிதிக்க கூடாது! ஸ்ரீநேசன் ஆதங்கம்
மன்னார் மாவட்டத்தில் காற்றாலைத்திட்டம் தொடர்பாக, மன்னார் மக்களின் எதிர்ப்புப் போராட்டம் 60 நாட்களாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.அதனை தேசிய மக்கள் சக்தி அரசு மதிக்க வேண்டும். மிதிக்க நினைக்கக் கூடாது. என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பில் புதன்கிழமை(01.10.2025 அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது>
அகிம்சை வழி போராட்டம்
“பொலிஸார் மக்களை அடக்குவதற்காக, பலாத்காரத்தினைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால், சாத்வீகப் போராளிகள் மூவர் காயப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அகிம்சை வழிப்போராட்டத்திற்கு இம்சை வழியில் காவல்துறை வன்மத்தைப் பயன்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் தமிழரசுக் கட்சியின் அகிம்சைப் போராட்டத்தினை பேரினவாதத் தலைமைகள் பலாத்கார வன்முறையில் 30 ஆண்டுகள் அடக்கியதால், தமிழ் இளைஞர்கள் 30 ஆண்டுகள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
அந்தப் படிப்பினையை சிங்களத் தலைமைகள் வேகமாக மறந்து செயற்படுகின்றார்கள். அடக்குமுறை, ஒடுக்குமுறை ஆண்டான் அடிமை முறை சமூகத்துக்கே பொருத்தும் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும், வணக்கத்துக்குரிய மதத்தலைவர்கள் பந்தாடப்படுவது மக்களைக் கொதிப்படையச் செய்யும் என்பதை இந்த அரசாங்கம் உணர வேண்டும்.
அத்தோடு, மறுத்தால் தமிழ் மக்கள் மிக விரைவாக இந்த அரசு மீது நம்பிக்கை இழந்துவிடுவர். அவர்களை எதிர்மறையான நிலைக்கு இந்த அரசு தள்ளக்கூடாது. என அவர் தெரிவித்துள்ளார்.



