சுதந்திர தினத்தில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தேசங்களில் ஒன்று சேர்ந்த ஈழத்தமிழர்கள் (Video)
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்ட கரிநாள் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு சமாந்திரமாக இன்று புலம்பெயர் நாடுகளின் முக்கிய நகரங்களிலும் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், லண்டன், பரிஸ் ஆகிய நகரங்களில் உள்ள இலங்கை தூதரகம் அமைந்துள்ள இடத்துக்கு அருகே ஒன்றுகூடிய மக்கள் தமது போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இலங்கையின் சுதந்திர நாளுக்கெதிரான பதாதைகளையும் தாங்கியபடி கண்டனக் கொட்டொலிகளை எழுப்பியிருந்தனர்.
தூதரகத்தின் மாடியில் கட்டப்பட்டிருந்த இலங்கையின் தேசியக்கொடிக்கு சமாந்தரமான உயரத்தில் நீண்ட கோல் ஒன்றில் தமிழர் தாயகத்தின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டிருந்ததையும் இந்தப்போராட்டத்தில் அவதானிக்க முடிந்தது.
இதேபோலவே பரிஸ் நகரிலும் இலங்கை தூதரகம் அமைந்துள்ள இடத்துக்கு அருகே இன்று மாலை ஒன்று கூடிய மக்கள் ஒற்றையாட்சிக்கெதிராகவும் தமிழின அழிப்பிற்கான அனைத்துல விசாரணையை வலியுறுத்தியும் 13ம் திருத்தச் சட்டத்தை நிராகரித்தும் கொட்டொலிகளை எழுப்பியிருந்தனர்.
ஜேர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம் மற்றும் சுவிசிஸ் ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அதேவேளை கனடாவிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.





