நுவரெலியாவில் திடீர் சோதனை..! உணவக உரிமையாளர்களுக்கு கடும் நடவடிக்கை
நுவரெலியாவில் சித்திரை புத்தாண்டு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வசந்த காலத்தையொட்டி, நகரில் செயற்படும் உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள், வீதியோர விற்பனை நிலையங்கள் மற்றும் அவற்றில் தயாரிக்கப்படும் உணவின் தரத்தைப் பற்றிய திடீர் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை நடவடிக்கையை இன்று (09.04.2026) நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுச்சுகாதார அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டுள்ளனர்.
திடீர் சுற்றிவளைப்பு
இதன்போது, நகரில் செயற்படும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிசாலைகள் பரிசோதிக்கப்பட்டு, சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களின் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

சோதனைக்கு உட்பட்டதில், சமையலறை, உணவு சேமிப்பு பகுதிகள், சாப்பிடும் இடங்களின் தூய்மை, உணவு கையாளும் ஊழியர்களின் சுகாதாரம், பழுதான உணவுகள், காலாவதியான பொருட்கள் மற்றும் கலப்படங்கள் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், மனித பாவனைக்கு உதவாத பல பொருட்கள் அழிக்கப்பட்டு, காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த உணவகங்களில் வழக்கு தாக்கல் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாத உணவகங்கள் எதிர்காலத்தில் தொடர்ந்தும் திடீரென சுற்றிவளைக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


