அமெரிக்க நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகை அவசர கடிதம்..!
தாய்வான் நாட்டுடன் வணிகம் மற்றும் இதரத் தொடர்புகளை மேற்கொள்வதிலிருந்து அமெரிக்க மாநில அரசுகளையும் தனியார் நிறுவனங்களையும் தடுப்பதற்குச் சீனா தீவிரமாக முயற்சித்து வருவதாக அமெரிக்கா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை, விவசாயத்துறை மற்றும் வர்த்தகத்துறை ஆகிய மூன்று முக்கிய அரசாங்கத் திணைக்களங்கள் இணைந்து, அமெரிக்க மாநில ஆளுநர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு (CEOs) அவசரக் கூட்டு எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்பியுள்ளன.
வெள்ளை மாளிகை அவசர கடிதம்
அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகள், உள்ளூர் அரசாங்கங்களையும் தனியார் வணிகங்களையும் நேரடியாகத் தொடர்பு கொண்டு தாய்வானுடனான உறவுகளைத் துண்டிக்குமாறு அழுத்தம் கொடுப்பதாகவும், வொஷிங்டனின் "ஒரே சீனா கொள்கை" குறித்துத் தவறான புரிதல்களைப் பரப்புவதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தாய்வான் என்பது உலகளாவிய வர்த்தகக் கட்டமைப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு துடிப்பான ஜனநாயக நாடு என்றும், சீன அதிகாரிகளிடமிருந்து ஏதேனும் அச்சுறுத்தல்களோ அல்லது அழுத்தங்களோ வந்தால் உடனடியாக வெளியுறவுத்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை ஊடகப் பேச்சாளர் குவோ ஜியாகுன், அமெரிக்காவிற்கும் தாய்வானுக்கும் இடையே எந்தவொரு உத்தியோகபூர்வ தொடர்புகளும் ஏற்படுவதைச் சீனா வன்மையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தாய்வான் வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவின் இந்த பகிரங்க ஆதரவை வரவேற்றுள்ளதுடன், சர்வதேச அரங்கில் பெய்ஜிங் தங்களை எவ்வளவு முடக்க நினைத்தாலும் அமெரிக்கா தங்களுடன் கைகோர்க்கத் தயாராக இருப்பதை இந்த கடிதம் உறுதிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.