வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்! - அஜித் நிவாட் கப்ரால்
வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என யாழ். வருகை தந்த நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் சம்மந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் யாழ்ப்பாணத்தில் முதலீடுகள் மற்றும் கடன் வசதிகள் சம்மந்தமாக யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தார்.
இந்த கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், மத்திய வங்கி அதிகாரிகள், பிரதேச அரச, தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள், முதலீட்டாளர்கள், நொதேன் தனியார் வைத்தியசாலை பணிப்பாளர், பனை அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை நிர்வாகத்தினர் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அமைச்சர்,
யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தோம். குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் வர்த்தக சங்கங்கள் விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து இருந்தோம். பனை அபிவிருத்தி தொடர்பிலும் தொடர்பில் ஆராய்ந்தோம்.
அதேபோல் பனை உற்பத்திகளை எவ்வாறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதை ஆராய்ந்தோம்.
அத்தோடு புகையிலை உற்பத்தி தொடர்பிலும், புகையிலை உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் ஆராய்ந்தோம்.
படகு கட்டுமானங்கள் தொடர்பாகவும் விவசாயம் மூலம் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என ஆராய்ந்திருந்தோம்.
அரச பொருளாதார ஊக்குவிப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பினூடாக சில திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.
விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பாக விரிவாக ஆராய்ந்து இருந்தோம். அத்தோடு இந்த இரண்டு துறைகள் மூலமே எமது நாட்டின் பொருளாதாரத்தை மேன்மேலும் அதிகரித்துச் செல்ல முடியும்.
தற்போது குறுகிய காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கூடிய சில திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம்.
வடபகுதியிலுள்ள சிறு தொழில் முயற்சியாளர்கள் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தாமாகவே தமது நிலையை மேம்படுத்தி செல்வது வரவேற்கத்தக்கது.
முதலீட்டாளர்களுக்கு எமது அமைச்சின் ஊடாக பூரண ஒத்துழைப்பினை வழங்கத் தயாராக இருக்கின்றோம்.
அத்தோடு மேலும் வடபகுதியில் இவ்வாறான சுயதொழில் முயற்சியாளர்கள், நடுத்தர முயற்சியாளர்களுக்கு நம்மால் ஆன உதவியை ஒத்துழைப்பினை வழங்கி அவர்களை மேம்படுத்துவதன் மூலம் எமது பிரதேசத்தில் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என்பது எமது நோக்கமாகும்.
வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறப்பதற்கு நாங்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வருகின்றோம். எனினும் எதிர்காலத்தில் அவற்றை மீளத் திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
நுண்கடன் திட்டம் என்பது ஒரு பிரச்சனையான விடயமாகக் காணப்படுகின்றது. குறிப்பாக நுண் கடன்பட்டவர்கள் கடனை மீளச் செலுத்த முடியாத நிலை இங்கே காணப்படுகின்றது.
அதோடு இந்த நுண்கடன் தொடர்பாக நாடு பூராவும் ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக கடன் பெற்றவர் பலர் அதனைத் திருப்பி செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
சிலர் கடனை பெற்று சில தொழில் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். எனினும் அந்த தொழில் முயற்சியானது, அந்த தொழில் சுற்றாடல் மற்றும் அச்சூழல் காரணமாக அது சாத்தியப்படாததன் காரணமாகப் பொதுமக்கள் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
அத்தோடு வியாபார வலையமைப்பும் இந்த நுண் கடன் பிரச்சினைக்கு ஒரு காரணமாகக் காணப்படுகின்றது.
எனினும் இந்த குறித்த நுண்கடன் தொடர்பான பிரச்சினை தொடர்பில் நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.



