மத வழிபாட்டுத்தலங்கள் அமைக்கும் சர்ச்சையில் தொல்பொருளியல் மாபியாக்கள் தொடர்பு: விதுர
தொல்பொருளியல் என்ற போர்வையில் விரும்பும் இடங்களில் மத வழிபாட்டுத்தலங்களை அமைக்கப்படும் செயற்பாடுகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (06.07.2023) ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, தொல்பொருள் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தொல்பொருள் கட்டளைச் சட்டம் நடைமுறையிலுள்ளது.
அந்த சட்ட மூலத்துக்கு முரணாக எவருக்கும் செயற்பட முடியாது என்பதுடன் சட்டத்துக்கமைய செயற்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தும்.
அனுமதிக்க முடியாது
மாறாக ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமெனில், அதனை நாடாளுமன்றத்தின் ஊடாகவே செய்ய முடியும்.
இந்த சட்ட மூலத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் புதிய சட்டமூலம், சட்ட வரைவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொல்பொருளியல் எனக் குறிப்பிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது.
குறித்த இடங்கள் எந்த திணைக்களத்தின் கீழ் அல்லது நிறுவனத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றதோ அவர்களால் மாத்திரமே அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். எனவே எந்தவொரு மதத் வழிபாட்டுத் தலத்தையும் அவரவர் விரும்பும் இடங்களில் அமைக்க முடியாது.
எனவே தற்போது சகல மதத் தலங்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான அளவுகோல்கள் உரியத் தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பதற்றமான சூழல் ஏற்படும்
மதத் தலங்களை மாத்திரமின்றி , அவற்றிலுள்ள மதகுருமார்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத வழிபாட்டுத்தலங்களை அமைப்பதாயினும் அவற்றுக்கும் உரிய அனுமதியைப் பெற வேண்டும். ஆனால் அனுமதி பெறாமல் மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமையின் காரணமாகவே மக்கள் கோபமடைகின்றனர்.
இவ்வாறு கோபமடையும் மக்கள் வீதிக்கு இறங்கினால் நாட்டில் எவ்வாறான பதற்றமான சூழல் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர்.
எனவே தான் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம். இவ்வாறான செயற்பாடுகளின் கீழ் தொல்பொருளியல் மாபியாக்களும் செல்வாக்கு செலுத்துகின்றன என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |