ஏழைகளுக்கு அடிமேல் அடி! உயரும் விலைகள்! நீளும் தட்டுப்பாட்டுப் பட்டியல்
நேற்று முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையினை 17 ரூபாவினால் அதிகரிக்கக் கோதுமை மா இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி இன்று முதல் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதுடன், அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று இரவு கூடிய போது கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்கத் தீர்மானித்திருந்தனர்.
அந்தவகையில் , 450 கிராம் பாண் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் ,கொத்து ரொட்டியின் விலையினை 10 ரூபாவினாலும், பரோட்டா,ரோல்ஸ் ,மரக்கறி ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலையினை 5 ரூபாவினாலும் நாளை முதல் அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக, நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால்மா, எரிவாயு, மரக்கறிகளுக்குச் சந்தையில் ஏற்கனவே தட்டுப்பாடு நிலவுகின்றது.
இந்த பட்டியலில் தற்போது கோதுமை மாவும் இணைந்துள்ளது.
