77 ஆவது சுதந்திர தினமும் தமிழ் மக்களது நிலையும்...!
இலங்கைத் தீவானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனாலும் இலங்கைத் தீவில் இனங்களுக்களுக்கிடையில் புரையோடிப் போயுள்ள தேசிய இனப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாத நிலையிலேயே உள்ளது.
இதன் காரணமாகவே ஒரு பகுதியினர் சுதந்திர தினம் கொண்டாட்டத்தில் ஈடுபட, இன்னொரு பகுதியினர் அதனை தமது கரிநாளாகவும் அனுஸ்டித்து வருகின்றனர்.
காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து பேசுகின்ற போதும் அது குறித்து ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுத்ததாக இல்லை.
பொருளாதார நெருக்கடி
தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும்(Anura Kumara Dissanayake) இனப்பிரச்சினை தீர்வு குறித்து பேசி வரும் கருத்துகளும் அவ்வாறே வெற்று வார்த்தைகளுடன் முடிந்து விடுமா என்ற கேள்வியும் பாதிக்கப்பட்ட மக்களிடம் உள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வீதிக்கு மக்கள் இறங்கியமையால் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ(Gotabaya Rajapaksa ) பதவி விலகியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக ரணில் விக்கிரமசிங்க(Ranil Wickremesinghe) தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் ஜனாதிபதியாகினார்.
அவர் பதவிக்கு வந்ததும் வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக் கொண்டதுடன், 75ஆவது சுதந்திர தினத்திற்கு முன்பாக அப்பிரச்சினைகளை தீர்ப்பேன் எனவும் அனைவரும் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாட எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
அதன் ஒரு கட்டமாக சர்வகட்சி சந்திப்புகள், தமிழ் கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்புகள் என்பன நடந்தன. ஆனால் தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை.
77 ஆவது சுதந்திர தினம்
சுதந்திர தினத்திற்கு முன்னதாக பிரச்சினைக்கு தீர்வு என்பது வெறும் சந்திப்புகளுடன் நிறைவுக்கு வந்திருந்ததுடன் 75 ஆவது சுதந்திர தினமும் கடந்து தற்போது 77ஆவது சுதந்திர தினமும் முடிவடைந்துள்ளது.
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் காலி முகத்திடலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்காவின் தலைமையில் எளிமையாக இடம்பெற்றிருந்தது. இதன்போது தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.
நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேவையற்ற செலவுகளை தவிர்த்து அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி மாவட்ட செயலகங்களில் பிரதான நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.
சில தமிழர் பகுதிகளில் இராணுவ புலனாய்வு பிரிவின் ஆதரவுடன் வாகனப் பேரணிகளும் கடந்த ஆண்டைப் போன்று இடம்பெற்றிருந்தது.
வடக்கு - கிழக்கு தமிழர் பகுதிகளில் தமிழ் மக்களின் உரிமைக் குரலை வெளிப்படுத்தி சுதந்திர தினத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றிருந்தது.
பல்வேறு அச்சுறுத்தல்கள், அடக்கு முறைகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
கிளிநொச்சியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இவைதவிர, யாழ். பல்கலையில் ஏற்றப்பட்ட தேசிய கொடி இறக்கப்ப்டு கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு மாணவர்கள் சுதந்திர தினம் எமக்கு கரிநாள் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் முகமாக புலம் பெயர் தேசங்களிலும் இலங்கை தூதரகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.
சுதந்திர தினத்தில் தெற்கில் இடம்பெற்ற கொண்டாட்டங்களும் வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களும் இந்த நாட்டில் இன்னும் இரு வேறு தேசங்களாக மக்கள் வாழ்ந்து வருவதையே படம்போட்டு காட்டுகின்றன.
இந்த நிலையை இன்னும் தென்னிலங்கை உணராமைக்கு காரணம் என்ன...? யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்துள்ள போதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நல்லெண்ண முயற்சிகள் கூட முழுமனத்துடன் இடம்பெற்றதாக தெரியவில்லை.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அப்பால் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, காணி விடுவிப்பு என தமிழ் மக்கள் முன் ஏராளம் பிரச்சினைகள் உள்ளன.
தமிழ் மக்களின் கேள்வி
சர்வதேச ரீதியில் ஏற்படும் நெருக்கடியை தணிப்பதற்கும், ஐ.நாவின் அழுத்தத்தை குறைப்பதற்காகவும் அவ்வப்போது ஒரு சில காணி விடுவிப்புக்களும், ஒரு சில கைதிகளின் விடுதலையும் இடம்பெற்றாலும் கூட அவை திருப்தியைத் தருவதாக அமையவில்லை. தற்போதைய அரசாங்கம் முதல் முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது.
கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக கடும் போக்குடன் செயற்பட்ட இந்த அணி தற்போது தேசிய மக்கள சக்தி என்ற புதிய முகமூடியுடன் தமிழ் மக்களின் ஆதரவையும் பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது.
அந்த முகமூடியை நிரந்தரமாக அணிந்து மக்களது பிரச்சினைகளை இவர்கள் தீர்ப்பார்களா என்பதே தமிழ் மக்களின் கேள்வியாகும்.
பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க அனைவரும் ஒன்றுபட்ட செயலாற்ற வேண்டிய நிலையில் கூட தமது நாட்டில் வாழும் இன்னொரு தேசிய இனத்திற்கு தமக்கு இருப்பது போன்ற சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் கொடுப்பதற்கு இன்னமும் தென்னிலங்கை முன்வரவில்லை என்பது மிகவும் வேதனையான விடயம்.
இந்த நாட்டில் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதவிடத்து இந்த நாடு இன்னும் பாதாளத்தை நோக்கியே செல்லும் என்பதை தென்னிலங்கை அரசியல்வாதிகள் உணரவேண்டும்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தமே இந்த நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு அவ்வாறான சம்பவம் இந்த நாட்டில் மீள நிகழாமையை உறுப்படுத்த வேண்டும்.
இதனை அனைத்து சமூகமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அதன் மூலமே 78 ஆவது சுதந்திர தினத்தை என்றாலும் எல்லோரும் ஒரு தாய் மக்களாக ஒருவர் தோளில் ஒருவர் கைகோர்த்து கொண்டாட முடியும்.
அதுவே இந்த நாட்டின் உண்மையான சுதந்திர தினமாகவும் அமையும் என்பதே உண்மை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 20 February, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
