திலீபனின் சிலை வைக்கப்பட்ட விவகாரம்: 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு
யாழ்ப்பாணம் - நல்லூரில் தியாக தீபம் திலீபனின் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அரசியல்வாதிகள் உட்பட 14 பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
சிலையின் நிதி உதவி, கட்டுமானம், விளம்பரம் மற்றும் திறப்பு விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டவர்களிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (21.10.2026) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சிலை
ஃபைபர் (Fiber) மூலமாக அமைக்கப்பட்ட இந்த சிலையை பொலிஸார் கைப்பற்றி நீதிமன்றத்தில் சான்றாக ஒப்படைத்துள்ளதுடன், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தடைசெய்யப்பட்ட அமைப்புகளையோ அல்லது அதன் அடையாளங்களையோ விளம்பரப்படுத்துவது இலங்கையின் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்ட திலீபன்
தியாக தீபம் திலீபன் (இராசையா பார்த்தீபன்), இந்திய அரசிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 1987 செப்டெம்பரில் நல்லூரில் 12 நாட்கள் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டு உயிர்நீத்தார்.
இந்த நிலையில், திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த செப்டெம்பர் 26 அன்று நிறைவடைந்த நிலையில், செப்டெம்பர் 27 அதிகாலை பொலிஸாரால் இந்த சிலை நல்லூர் நினைவுச் சதுக்கத்திலிருந்து, பொலிஸாரால் அகற்றப்பட்டது.