அரச வங்கிகளை தனியார் வங்கிகளாக மாற்ற திட்டமிடும் அரசாங்கம்: சந்திரசேகரன் பகிரங்கம்
கடன் மறுசீரமைப்பு என்ற போர்வையில் நாட்டில் உள்ள அரச வங்கிகளை தனியார் வங்கிகளாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
''நாட்டில் ஏற்பட்ட சகல பிரச்சினைகளுக்கும் ரணில் மற்றும் ராஜபக்சக்களே பொறுப்பு கூற வேண்டும்.
கடன் மறுசீரமைப்பு திட்டம்
நாட்டின் மொத்த கடன் 2010 ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 594 டொலர் மில்லியனாகவும் 2019 ஆம் ஆண்டு 13 ஆயிரத்து 431 டொலர் மில்லியனாகவும் 2022 ஆம் ஆண்டு 23 ஆயிரத்து 491 டொலர் மில்லியனாகவும் காணப்பட்டது.
ஆனால், தற்போது இலங்கை வெளிநாடுகளிடம் இருந்து கடன் வாங்கும் வேகம் வெகுவாக அதிகரித்துள்ளதால் மொத்த கடன் தொகையும் அதிகரித்து செல்கிறது.
இந்நிலையில் உள்நாட்டில் பெற்ற கடனை கூட அரசாங்கத்தினால் திருப்பி செலுத்த முடியாத அவல நிலை காணப்படுகின்றது.
இலங்கை வெளிநாடுகளிடமிருந்து பெற்ற மொத்த கடன் தொகை 42 .4 டொலர் மில்லியனாக காணப்படுகிற நிலையில் ஐ.எம்.எப் நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக கடன் மறுசீரமைப்பு திட்டமானது எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.
பங்களாதேஷிடம் பெற்றுக்கொண்ட கடன்
மேலும், 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற 1400 கோடி பிணைமுறை மோசடி, கோட்டபாய ராஜபக்ச ஆட்சியில் 1560 கோடி சீனி மோசடி, தாமரைக் கோபுர மோசடி மற்றும் பனாமா ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட இலங்கையின் பிரபல அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகள் என்பன கடந்த காலங்களில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
எனினும் குறித்த மோசடிகள் மூலம் சூறையாடப்பட்ட மக்களின் பணம் இலங்கைக்கு மீண்டும் கொண்டுவரப்படவில்லை.
இந்நிலையில் பங்களாதேஷிடம் பெற்றுக்கொண்ட கடனை கூட செலுத்த முடியாத அரசாங்கத்தின் நிலை இவ்வாறு தொடருமானால் இலங்கையின் எஞ்சிய பாகங்களையும் பங்களாதேஷ்க்கு தாரை வார்க்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |