படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர முடியாத நிலை இலங்கையில் காணப்படுகின்றது - பா.அரியநேத்திரன்
படுகொலைதான் செய்து விட்டாலும் அந்த படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர முடியாத நிலை இன்று இலங்கையில் காணப்படுகின்றது என சிரேஸ்ட ஊடகவியலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் (Pa.Ariyanethran) தெரிவித்துள்ளார்.
இதற்கான தீர்வு என்பது இலங்கை அரசாங்கத்தின் ஊடாக கிடைக்காது என்பதை நாங்கள் எப்போதோ உணர்ந்துவிட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் (Mayilvaganam Nimalarajan) 21வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் ஊடக அமையத்தில் இந்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,
நிமலராஜன் 2000ஆம் ஆண்டு இதே தினத்தில் படுகொலை செய்யப்பட்டார்.அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பே 1985ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தேவராஜா என்னும் ஊடகவியலாளரே முதன்முதலாக படுகொலை செய்யபட்டார்.
நிமலராஜன் 2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் தான் ஊடகவியலாளர்கள் மத்தியில் எழுச்சியும் இவ்வாறான ஊடகவியலாளர்கள் படுகொலைகள் தொடர்பிலான அச்ச உணர்வினையும் ஏற்படுத்தியிருந்தது.
நிமலராஜன் ஏன் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. எனினும் யாழ் மாவட்டத்தில் அக்காலத்தில் நடந்த தேர்தலின் போது அங்கு தேர்தலில் போட்டியிட்ட தமிழ் கட்சியொன்றை சேர்ந்தவர்கள் மேற்கொண்ட தேர்தல் மோசடியை அவர் வெளிஉலகுக்கு கொண்டுவந்தார்.
அதன்காரணமாக பல அச்சுறுத்தல்கள் அவருக்கு வந்துகொண்டிருந்தது. இவ்வாறான நிலையிலேயே அவர் பிபிசி சிங்கள சேவைக்கு செய்தினை வழங்கிய பின்னர் அவர் வீட்டில் வைத்து இரவு 10.00 மணிக்கு சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த படுகொலை நடைபெற்றபோது முதலாவது ஊடகவியலாளர் படுகொலையென்று கருதப்பட்டதன் காரணமாக சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
அதில் முக்கிய சந்தேக நபராக இருக்ககூடிய ஒருவரை அங்கிருந்த அரசியல்கட்சியை சேர்ந்தவர்கள் வெளிநாடு அனுப்பிவைத்தனர். அதன் காரணமாக அந்த விசாரணைகள் இடையில் முடக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டவர்களும் விடுவிக்கப்பட்டதாக அப்போது செய்திகள் வெளிவந்தன.
அரசியல் செல்வாக்கினைக்கொண்டு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஊடகவியலாளர் நிமலராஜனை படுகொலை செய்தார்கள் என்று பரவலாக கூறப்பட்டது.
யார் அந்த கொலை செய்தார்கள் என்று பெயர் குறிப்பிட்டும் கூறப்பட்டது. அவர் வெளிநாட்டுக்கு சென்றதாக ஊடகங்களில் செய்திவந்தது.
1985ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தேவராஜா தொடக்கம் தொடர்ச்சியாக 44 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இதில் 35தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள், 07 சிங்கள ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள், 02 இஸ்லாமிய ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த 44 ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பிலும் தொடர்ச்சியாக நாங்கள் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கைகளை விடுத்தாலும் கூட எந்த சந்தேக நபர்களும் கைதுசெய்யப்படவில்லை,கைது செய்யப்பட்டவர்களும் விடுதலைசெய்யப்பட்ட வரலாறே இருக்கின்றது.
2008ஆம் ஆண்டு சர்வதேச ஊடக மையத்தினால் 173 நாடுகளை கொண்ட பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஊடக சுதந்திரத்தினை மீறுகின்ற நாடுகள் வரிசையில் 165வது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது.
2010ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படாவிட்டாலும் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலையே காணப்படுகின்றது.
இன்று ஊடகவியலாளர்களை நினைவுகூருவதை வெளியில் செய்யமுடியாத நிலையே இன்று உள்ளது. அவ்வாறான அடக்குமுறை எந்த அரசாங்கம் வந்தாலும் இருந்து கொண்டிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கின்றனர். பலர் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தப்படுகின்றனர். சிலர் செய்தி சேகரிப்பின் போது அதிகாரிகளினால் அச்சுறுத்தப்படுகின்றனர், அரசியல்வாதிகளினால் அச்சுறுத்தப்படுகின்றனர்.
செய்தி சேகரிப்பின் போது பாதுகாப்பு இல்லாதநிலை மட்டக்களப்பில் தொடர்ச்சியாக காணப்படுகின்றது. ஊடகவியலாளர்கள் உயிரைப்பணயம் வைத்து செயற்படும் நிலையே 2021ஆம் ஆண்டிலும் இருக்கின்றது.
இறந்த ஊடகவியலாளர்களாக இருக்கலாம், பொதுமக்களாக இருக்கலாம், போராளிகளாக இருக்கலாம் அவர்களை நினைவுகூர வேண்டியது அந்த மக்களின் கடமையாகும்.
படுகொலைதான் செய்துவிட்டாலும் அந்த படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர முடியாத நிலை இன்று இலங்கையில் காணப்படுகின்றது.
இதற்கான தீர்வு என்பது இலங்கை அரசாங்கத்தின் ஊடாக கிடைக்காது என்பதை நாங்கள் எப்போதோ உணர்ந்து விட்டோம்.
இவ்வாறான படுகொலைகளை செய்தவர்களை சர்வதேச நீதி விசாரணை ஊடாக விசாரணைசெய்யவேண்டும் என்பதை இந்த 21வதுநினைவு தினத்தில் நிலைநிறுத்திக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
