கல்லோயாவில் தொடங்கி முள்ளிவாய்க்காலில் சிங்களம் பெற்ற “தம்மதீப“வெற்றி
இலங்கை தீவில் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கான தடையாக ஈழத்தமிழர்களுடைய ஆயுதப்போராட்டம் மூன்று பத்தாண்டுகளாய் எழுந்து நின்றது.
அந்தக் கால கட்டத்தில் சிங்கள பௌத்த மயமாக்கல் ஒரு அடி கூட நகர முடியாதவாறு தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது என்பது உண்மையே. ஆனால் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவம் அடைந்த இனப்படுகொலை வெற்றி என்பது சிங்கள பௌத்த மயமாக்கலுக்கான தடையை உடைத்துவிட்டது.
இந்த உடைப்பின் மூலம் மிக வேகமாக தமிழர் தாயகம் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு கடந்த 14 வருடங்களாக உட்பட்டுக்கொண்டிருக்கிறது.
தமிழர் மீது மேற்கொண்ட ஒடுக்குமுறை
இங்கே தமிழீழ விடுதலை புலிகள் தமிழர் தாயகத்தில் சிங்களதேசம் ஈழத்தமிழர் மீது மேற்கொண்ட அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் தடையாக இருந்தார்கள் என்பதை அரசியல், இராணுவ, தத்துவார்த்த அர்த்தத்தில் புரிந்துகொள்ள வேண்டும்.
அந்தத் தடை முள்ளிவாய்க்காலில் உடைக்கப்பட்டது. இதன் மூலம் இராணுவம், பொலிஸ், நிர்வாக அலகுகள், அதிகாரிகள், சமூக குழுக்கள், பௌத்த அமைப்புகள், பிக்குகள், ஊடகங்கள் என அனைத்தும் தமிழர் தாயகத்துக்குள் படையெடுத்து சிலந்தி வலைப்பின்னல் போன்று தமிழர் தாயகத்தை தற்போது கிடுக்குப்பிடிக்குள் கொண்டு வந்திருக்கின்றன.
இந்த முற்றுகையிலிருந்து தமிழர் தாயகத்தை பாதுகாப்பது என்பது இலகுவான காரியம் அல்ல. அதற்கு தமிழ் மக்கள் ஒன்றுதிரண்ட சக்தியாக நீண்ட ஜனநாயக முறைமை தழுவிய வெகுஜனப் போராட்டங்களுக்கு தயாராக வேண்டும்.
இந்தக் கிடுக்குபிடியை சிங்கள தேசம் நாடாளுமன்ற சட்டங்களினாலும், நிர்வாக ஏற்பாடுகளினாலும், நீதிமன்ற தீர்ப்புகளின் ஊடாகவும், இராணுவ பொலிஸ் புலனாய்வுத்துறை அச்சுறுத்தல்களுக்கூடாகவும் தமிழ் மக்களை உளவியல் ரீதியாக உடைத்து முடமாக்கியுள்ளது.
சிங்கள மேலாண்மை வாதத்தை தமிழ் மக்களின் மனதில் உளவியல் ரீதியாக வழமைப்படுத்தல் என்ற உளவியல் யுத்தம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம் தமிழ் மக்கள் ஒரு வலுவான வெகுஜன போராட்டங்களை நடத்த முடியாமல் உளசோர்வுக்கும், உளச்சலிப்பிற்கும் உட்படுத்தி தமிழர் போராட்டங்களை எழவிடாமல் தடுக்கிறது.
பௌத்த சிங்கள தேசியவாதம்
1880 ஆம் ஆண்டுகளிலேயே பௌத்த சிங்கள தேசியவாதம் எழுச்சி பெறத் தொடங்கிவிட்டது. அதனை பெரு விருச்சமாக அநாகரிக தர்மபால வளர்த்தெடுத்தார்.
பௌத்த சிங்கள தேசியவாதத்தின் இலட்சியம் இலங்கை தீவை சிங்கள பௌத்த நாடாக மாற்றுவது. அதற்கு இந்தியஎதிர்ப்பு வாதத்தை முதன்மைப்படுத்துவது.இலங்கை மீதான இந்தியாவின் பிடியை அகற்றுவது. தமிழ் பேசும் மக்கள் இலங்கை தீவில் இருக்கும் வரை இந்தியாவின் ஆதிக்கம் இலங்கையில் இருக்கும்.
எனவே தமிழர்களை இலங்கை தீவில் இருந்து முற்றாக அகற்றுவது என்பது தான் அவர்களுடைய முதல் கட்ட வேலை திட்டமாக அமைந்தது.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே தமிழ் இனவிரோத
நிலைப்பாட்டை சிங்கள தலைவர்களும் சிங்கள தேசமும் எடுத்துவிட்டன.
அந்தக் காலகட்டத்தில் இத்தகைய தமிழின ஒழிப்பு ஆரம்பமாகிவிட்டது என்பதை தமிழ் தலைவர்கள் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள், பார்க்கவுமில்லை.
அந்த அளவிற்கு அன்றைய தமிழ் தலைவர்களிடம் நீண்ட தூர அரசியல் பார்வையும் இருக்கவில்லை என்பதுதான் மிகப் பரிதாபமானதும் துரதிஷ்டவசமானதாகும்.
இலங்கை தீவின் ஒட்டு மொத்த சனத்தொகை
இலங்கைத் தீவில் ஒட்டு மொத்த சனத்தொகையில் 12% குறைந்த அளவினராக தமிழர்கள் இருக்கின்றபோது மொத்த நிலப்பரப்பில் 30 விகித நிலப்பரப்பில் தமிழர்கள் வாழ்கின்றனர்.
அதாவது வட கிழக்கு மாகாணம் 30 விகித நிலப்பரப்பளவைக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இலங்கைத் தீவின் 1516.4 கிலோமீட்டர் நீளமான கடத்தரப்பில் 14 கரையோர மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் தமிழர் தாயகத்துக்குள் அடங்குகின்றன.
ஆனால் இந்த தமிழர் தாயகத்தின் கடற்பரப்பு 899.3 கிலோமீட்டர்கள் ஆக உள்ளது. புத்தளம் மாவட்டத்தின் 241.3 கி.மீ கடற்கரையோரப் பகுதியின் பெரும்பகுதியில் தமிழ்பேசும் மக்களே வாழ்கின்றனர்.
இத்தகைய புவியியல் சாதக தன்மையும் கேந்திரத் தன்மையும் இயற்கை வளமும் தமிழர் தாயகம் போதுமான அளவு கொண்டிருப்பதனால் சிங்கள தேசத்திற்கு தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்வது அவசியம் ஆனதும் அத்தியாவசியமானதாகவும் காணப்படுகிறது.
டொனமூர் அரசியல் யாப்பு சீர்திருத்தம்
19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலே சிங்கள தேசத்தில் பௌத்த மறுமலர்ச்சி ஏற்பட 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை விரிவுபடுத்த தொடங்கியது.
அந்த விரிவுபடுத்தலில் நிலங்களை ஆக்கிரமித்தல் கையகப்படுத்தல் என்ற கொள்கையை வகுத்தனர். இதன் அடிப்படையிற்தான் முதற்கட்டமாக தமிழர்கள் கையில் இருக்கின்ற நிலப்பரப்பையும் பெரும் கடல் பரப்பையும் சிங்கள தேசம் கைப்பற்ற முனைகிறது.
அதன் முதற் படியாக நிலத்தை பறிப்பது, நிலத்தை பறிப்பதன் மூலம் கடலைத் தமது கட்டுப்பாட்டுள் கொண்டு வருவது. இதன் மூலம் இலங்கை தீவை முற்று முழுதாக சிங்கள பௌத்த மயப்படுத்துவது என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
1931ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட டொனமூர் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் மந்திரி சபை ஆட்சி முறைமை உருவாக்கப்பட்டது.
இந்த மந்திரி சபை ஆட்சி முறையில் 1936ல் தனிச் சிங்கள மந்திரிகளை மாத்திரமே தெரிவு செய்து தமிழ் அரசியல் தலைவர்களை புறந்தள்ளி அரசியல் அதிகாரம் அற்றவர்களாக்கி உருவாக்கப்பட்ட தனிச்சிங்கள மந்திரி சபை 1947 ஆம் ஆண்டு வரை நீடித்தது.
அரசியல் உரிமை
தமிழ் மக்களை இலங்கைத் தீவின் அரசியல் அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான முதற்படி 1936ல் தனிச் சிங்கள மந்திரிசபை உருவாக்கிதன் மூலம் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை இல்லை.
அதிகாரம் இல்லை. நிர்வாகத்தில் பங்கு இல்லை. இத்தீவை சிங்களத் தலைவர்களே ஆளுவார்கள் என்பதை முதன்முறையாக பறைசாற்றிய இடம் 1936 ஆம் ஆண்டு சிங்களத் தலைவர்களால் அமைக்கப்பட்ட தனிச்சங்கள மந்திரி சபைதான் என்பதனை மறந்து விடக்கூடாது.
இருக்கின்ற சட்ட ஏற்பாடுகளை எவ்வாறு தமிழின அழிப்பிற்கு சாதகமாக வடிவமைத்து பயன்படுத்தலாம் என்ற தந்திரமும் நுணுக்கமும் சிங்களத் தலைவர்களுக்கு நன்கு தெரியும்.
தமிழ் தலைவர்களையும் தமிழ் புத்திஜீவிகளையும் பயன்படுத்தியே அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதும் அவர்களுக்கு கைவந்தகலை.
அதனை பொருத்தமான எல்லா சந்தர்ப்பத்திலும் அவர்கள் பயன்படுத்த தவறவும் இல்லை. வாய்ப்புகளை கையாள்கின்ற கலைதான் அரசியல்.
அந்த அரசியல் கலை வித்தையில் சிங்களத் தலைவர்கள் விற்பன்னர்கள்தான் என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
1930களின் நடுப்பகுதியில் டி. எஸ். சேனநாயக்கா தலைமையில் திட்டவட்டமான முடிவுகளுடனும் நீண்ட தூர பார்வையுடனும் திட்ட வரைவுகளை ஆய்வு செய்து தமிழர் தாயகத்தில் அபகரிப்பதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தார்.
பௌத்த சிங்கள மயமாக்கல்
இந்தத் தயார்படுத்தலை சுதந்திரம் அடைந்த கையோடு 1949 ஆம் ஆண்டு வறண்ட வலய அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்த முதலாவது சிங்கள குடியேற்றத் திட்டம் பட்டிப்பழை ஆற்றுப்பள்ளதாக்கில் தொடங்கியது.
அதுவே தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் அழிவின் ஆரம்பம் எனலாம். இந்த சிங்களக் கொடியேற்றத்தில்தான் இங்கினியாகல என்ற இடத்தில் உள்ள சிங்கள குடியேற்றவாசிகளால் 11 ஜூன் 1956 ஆம் ஆண்டு முதலாவது தமிழினப் படுகொலை மேற்கொள்ளப்பட்டது. 67ஆவது ஆண்டு கல்லோயா படுகொலை நினைவை தமிழர் தேசம் இந்த வாரம் அனுஷ்டிக்கிறது.
பௌத்த சிங்களமயப்படுத்தல் என்ற இலட்சியத்தை அடைவதற்காக சிங்கள தேசம் தமிழர் தாயகத்தின் மீது பல்வேறு வகையான ஒடுக்கு முறைகளை படிப்படியாக மேற்கொண்டது.
அதன் முதல் படி தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுவுவது, சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதும், இதன் மூலம் தமிழ் மக்களை ஒரு பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுவது அல்லது சிங்கள மக்களுடன் கரைத்துவிடுவது.ஒரு பிரதேசத்தின் தமிழ் மக்களின் செறிவை குறைப்பது.
தமிழர் செறிந்து வாழும் பிரதேசத்தை நிர்வாக ஏற்பாடுகளின் மூலம் பிரித்து சிங்கள மாவட்டங்களுடனும் அல்லது மாகாணங்களோட இணைப்பதன் மூலம் அந்தப் பிரதேசத்தில் தமிழ் மக்களை சிறுபான்மையர் ஆக்குவது, அதன் மூலம் தமிழ் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக இல்லாமல் செய்வதும், அந்தப் பிரதேசத்தில் இருந்து சிறுபான்மையினர் ஆக்கப்பட்டதன் விளைவாக ஒரு படிமுறையாக தமிழ் மக்களை வெளியேற வைப்பது.
அத்தோடு நிர்வாக ஏற்பாடுகள் மூலம் தமிழர் பகுதியில் சிங்கள அதிகாரிகளை நியமிப்பது, சிங்கள இராணுவ கூட்டுப்படை தலங்களை உருவாக்குவது.
சிங்கள பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பது, அரச திணைக்களங்கள் காரியாலயங்கள் என்பவற்றில் சிங்கள அதிகாரிகளையும் சிங்கள ஊழியர்களையும் அமர்த்தி சிங்கள மொழியிலேயே நிர்வாக ஒழுங்குகளை செய்வது, இதன் மூலம் சிங்கள மொழியை தமிழ் மக்கள் மீது திணிப்பது தமிழ் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ சிங்கள மொழியை நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் கற்கவும் பேசவும் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
இதற்கு நல்ல உதாரணம் நீர்கொழும்பிலிருந்து புத்தளம் வரையான பகுதியிலும் சிலாபம் பகுதியிலும் உள்ள தமிழர்கள் வீட்டு மொழியாக சிங்களத்தை பேசும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.
மேல் மாகாணத்தில் 200க்கும் மேற்பட்ட தமிழ் பாடசாலைகள் மூடப்பட்டு விட்டன என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் உண்டு. இவ்வாறு தமிழர் தாயகத்தின் மீது நில ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டதன் விளைவுகளினால் தமிழர் தேசத்தில் 1970களின் பின்னர் இளைஞர்கள் ஆயுதம் எடுத்துப் போராட தொடங்கினர்.
முள்ளிவாய்க்கால் பேரழிவு
1983 ஆம் ஆண்டின் பிற்பாடு ஆயுதப் போராட்டம் வீறு கொண்டு எழுந்ததன் விளைவு தமிழர் தாயகத்தில் சிங்களக் கொடியேற்றங்கள் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டன.
அல்லை, கந்தலாய் குடியேற்ற திட்டங்கள, மணல் ஆற்றில் உருவாக்கப்பட்ட டொலர், கென்ட் பண்ணைகள் போன்ற குடியேற்ற திட்டங்களும் தடைப்பட்டன.
அத்தோடு குடியேற்றப்பட்ட சிங்களக் கொடியேற்றவாசிகள் தென்பாகுதி நோக்கி தப்பியமோடியும் விட்டனர். 1983 லிருந்து 2009 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் சிங்கள தேசத்தின் தமிழர் தாயக அபகரிப்பு என்பது தற்காலிகமாக தடைப்பட்டிருந்தது.
ஆனால் முள்ளிவாய்க்கால் பேரழிவு சிங்கள தேசத்திற்கு இருந்த பெரும் தடையை உடைத்து சிங்களமயமாக்கலுக்கான பாதையை திறந்து விட்டிருக்கிறது.
கடந்த 14 ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில் என்றும் இல்லாத அளவிற்கு பௌத்தமயமாக்களும், சிங்களமயமாக்கல்களும் இணைந்த நில அபகரிப்பு இன்று யாழ்ப்பாணத்தின் வடகரை வரை பரந்துவிட்டிருக்கிறது.
தமிழ் கட்சிகளிடையே முரண்பாடுகளை தோற்றுவிப்பது, அரசியல் தலைவர்களை விலைக்கு வாங்குவது, தமிழ் தலைவர்களை சிங்கள தேசியக் கட்சிக்குள் இணைப்பது, தமிழ் அதிகாரிகளை நியமிப்பது, தமிழ அரசியல் கட்சிகளைக் கொண்டு சிங்களமயமாக்கல்களுக்கான அடிக்கட்டுமானங்களை இடுவது, தமிழர் தாயத்தில் ஆயிரம் விகாரைகளை கட்டுவது.
இறால் பண்ணைகளை அமைப்பது, மீன்பிடித் துறைமுகங்களை கட்டுவது, கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவது போன்ற பல்வேறு வகையான கொள்கைகளை கையாண்டு இலங்கை தீவை சிங்கள பௌத்த சிங்களமயப்படுத்தலுக்கான இலக்கினை நோக்கி சிங்கள தேசம் மிக வேகமாக நகர்ந்து செல்கிறது.
இந்தோ பசிபிக் பிராந்திய ஆதிக்கம்
இந்தச் சூழலில் தமிழ் மக்களும், தமிழ் தலைமைகளும் தமக்கிடையே குடும்பி சண்டை போடுவதும் தாமும் பிரிந்தது நின்று கொண்டு மக்களையும் பல்வேறு துண்டுகளாக பிரித்து சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது , தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்கின்ற சிங்கள அரசுக்கு துணை போவதாகவே அமையும்.
இந்நிலையில் கல்லோயா இனப்படுகொலையை நினைவில் நிறுத்தி எதிர்காலத்தில் தமிழர் தாயகம் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துக்களை கருத்தில் கொண்டு இன்றைய இந்தோ பசிபிக் பிராந்திய ஆதிக்க போட்டியில் ஈழத் தமிழர் தமக்கான பங்கையும் பாத்திரத்தையும் வாய்ப்பையும் வகையாக பயன்படுத்தி தமிழர் தாயகத்தை தக்க வைப்பது சாத்தியமானது.
எனவே இதற்கு தமிழ் மக்களை ஐக்கியப்படுத்தி ஒன்று
திரட்டப்பட்ட செயற்பாட்டு சக்தியாக வடிவமைப்பதிலுமே தங்கியுள்ளது.