ஜோர்டானில் இலங்கை தூதரகத்திற்கு வெளியே பரபரப்பு
ஜோர்டானின் அம்மான் நகரில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே இன்று (05) இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, தூதரக ஊழியர்கள் அனைவரும் மற்றும் அந்நாட்டில் வசிக்கும் இலங்கைச் சமூகத்தினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் சுமார் 12:20 மணியளவில் தூதரகத்திற்கு முன்னால் கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜோர்டான் பொதுப் பாதுகாப்பு பணிப்பகம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்களின் பாதுகாப்பு
இந்தச் சம்பவத்தின் போது பணியில் இருந்த உள்ளூர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கோப்ரல் ஜவாத் அலி கலஃப் அல்-சலைதா (Corporal Jawad Ali Khalaf Al-Salaita) உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், சந்தேக நபரை மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளனர். இதன்போது, பொலிஸ் கண்காணிப்பு பிரிவின் தலைவருக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சந்தேக நபர் பாதுகாப்புப் பணியாளர்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.