தமிழ் நீதிபதிகள்; சட்டமா அதிபர்கள்; சட்டத்தரணிகளை உடன் நீக்கிவிடுங்கள்! சபையில் சிறீதரன் சீற்றம் (Video)
இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் நீதிபதிகள், தமிழ் சட்டத்தரணிகள், தமிழ் சட்டமா அதிபர்கள் இவர்களை நீங்கள் நீக்கி விடுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் அவர்களை நீக்கிவிட்டு ஒரே சிங்களமயமாக அறிவிக்கலாமே எனவும் அவர் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
கடந்த வாரம் முல்லைத்தீவு - திருகோணமலை மாவட்டங்களுக்கு இடைப்பகுதியில் இருக்கின்ற குருந்தூர் மலை விகாரையில் சிங்கள பௌத்த பிக்குமார்களும், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் சென்று ஒரு இனவாத ரீதியிலான செயற்பாட்டை அங்கு மிக பிரம்மாண்டமாக செய்து தங்களின் இனவாத கருத்துக்களை கக்கியிருக்கிறார்கள்.
குறிப்பாக 2023.07.04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா நேரில் சென்று குருந்தூர்மலையை பார்வையிட்டுள்ளார். அங்கு அத்துமீறி அடாத்தாக கட்டப்பட்டிருக்கின்ற விகாரையை அவர் பார்வையிட்டிருந்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் வைத்து சரத் வீரசேகர கருத்து தெரிவிக்கும் போது இனவாத கருத்துக்களை கக்கியிருந்தார். “ஒரு தமிழ் நீதிபதி அவ்வாறான தீர்ப்புக்களை வழங்க முடியாது. அவர் ஒரு தமிழ் நீதிபதியாக தமது செயற்பாட்டை அங்கு செய்ய முடியாது என்று”.
அப்படியானால் நான் கேட்கிறேன் இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் நீதிபதிகள் தமிழ் சட்டத்தரணிகள் தமிழ் சட்டமா அதிபர்கள் இவர்களை நீங்கள் நீக்கிவிடுங்கள். அவர்களை நீக்கிவிட்டு ஒரே சிங்களமயமாக நீங்கள் அறிவிக்கலாமே என வினவியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |