ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு குறித்து தமிழரசுக் கட்சி விரைவில் விசேட அறிவித்தல்!
புதிய இணைப்பு
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெற இருந்த மத்திய செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.
மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இறுதி தீர்மானம்
இது குறித்து தொடர்ந்து கூறுகையில், மத்திய செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்வரும் 14 ஆம் அல்லது 16 ஆம் திகதி எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய நியமிக்கப்பட்ட சிறப்பு குழு கூடி,அதில் எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையில் அல்லது கலந்துரையாடல், உடன்பாடுகளின் அடிப்படையில் 18 ஆம் திகதிக்கு முன்னர் எந்த நேரமும் நாங்கள் எங்கள் மத்திய குழுவை கூடி மக்களுக்கான அறிவித்தலை வழங்க முடியும் என கூறினார்.
இதேவேளை மத்திய குழு கூடுவதாயின் குறிப்பிட்ட தினங்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற எந்த விதியும் எமது தமிழரசுக் கட்சியின் அமைப்பு விதியில் தெளிவாக சொல்லப்படவில்லை.
ஆகவே 17 ஆம் திகதி அறிவித்தல் வழங்கி 18 ஆம் திகதி மத்திய குழுவை கூடி, நாங்கள் மக்களுக்கு சொல்ல வேண்டிய எங்களுடைய கருத்தை மிக தெளிவாக சொல்வோம் என தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானம் முறையாக மேற்கொள்ளப்படாத பின்னணியில், யாரை ஆதரிப்பது என்பது குறித்து தமது கட்சி எதிர்வரும் 14 அல்லது 15 ஆம் திகதி உரியவாறான அறிக்கையொன்றை வெளியிடும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சஜித்திற்கான ஆதரவு
இம்மாதம் முதலாம் திகதி நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும் இத்தீர்மானம் குறித்து கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இத்தகைய குழறுபடிகளுக்கு மத்தியில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்கள் முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து, அவற்றின் உள்ளடக்கங்களின் அடிப்படையில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதெனத் தீர்மானிக்கும் நோக்கில் தமிழரசுக் கட்சியினால் கடந்த மாதம் நிறுவப்பட்ட விசேட குழு நேற்று(10) வவுனியாவில் கூடியது.
தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறீதரன் , எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் உள்ளடங்கும் குழுவில், சரவணபவன் தவிர்ந்த ஏனைய ஐவரும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட சிறீதரன்,
கடந்த முதலாம் திகதி கட்சியின் மத்திய குழு கூடிய வேளையில் ஜனாதிபதி வேட்பாளர்களின் சிலரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தமக்குக் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை எனவும், தற்போது அவை கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவற்றையும் நன்கு ஆராய்ந்ததன் பின்னர் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி இறுதித் தீர்மானம் ஒன்றை எதிர்வரும் 14 அல்லது 15 ஆம் திகதி வெளியிடுவதற்கு உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று எதிர்வரும் 14 ஆம் திகதி கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், அதுகுறித்த தீர்மானத்தையும் இக்குழு மீண்டும் கூடி ஆராய்ந்து மேற்கொள்ளும் எனவும், அதற்கு முன்பதாக தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து உரியவாறான அறிக்கையொன்றை வெளியிடும் எனவும் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.