மது வரி மூலமாகவே நாட்டை முன்னேற்றலாம்: ஜே.வி.பி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
இலங்கையைப் போல் மது வரி அதிகம் உள்ள நாடுகள் எங்கும் இல்லை, இலங்கையில் மது வரியை வைத்தே நாட்டை முன்னேற்றலாம் என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
மேலும், நாம் ஆட்சியைக் கைப்பற்றினால் முதலில் செய்வது மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது. அது இந்த அரசு செய்யாத வேலை. அதேவேளை, பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்கள் பற்றி ஆய்வு செய்வோம். பாதிப்பை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
வரிகள் அதிகம் உள்ள நாடு
அவர் மேலும் கூறுகையில், மலேசியாவில் பொருளாதாரப் பிரச்சினை வந்தபோது அந்நாட்டுப் பிரதமர் மஹாதீர் முஹம்மட் சொன்னார். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்னால் சர்வதேச நாணய நிதியத்திடமும் செல்ல முடியும். மக்களிடமும் செல்ல முடியும் என்று இறுதியில் அவர் மக்களிடமே சென்று பிரச்சினையைத் தீர்த்தார்.
ஆனால், எமது இந்த அரசால் மக்களிடம் செல்ல முடியாது. நாம் மக்களிடம் சென்றே உண்மையைக் கூறியே பிரச்சினையைத் தீர்ப்போம். வெளிநாட்டு முதலீட்டார்களை வரவைப்போம். அவர்கள் முதலீடு செய்வதற்காக அவர்களிடம் இலஞ்சம் வாங்கமாட்டோம். இன்று நடப்பது இதுதான்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஷங்கிரிலா, ஹில்டன் ஹோட்டல்களுக்குப் பணப் பெட்டியுடன் சென்று அமைச்சின் செயலாளர்களை எதிர்பார்த்துக் கிடக்கின்றனர். இலஞ்சம் கொடுப்பதற்காக அவர்கள் இவ்வாறு நடக்கின்றார்கள். எமது ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்காது.
இலங்கையைப் போல் வரிகள் அதிகம் உள்ள
நாடுகள் எங்கேயும் இல்லை. இலங்கையைப் போல் மது வரி அதிகம் உள்ள நாடுகளும்
எங்கும் இல்லை. அதேபோல், இலங்கையைப் போல் மக்களால் வாழ முடியாத நாடுகளும்
எங்கும் இல்லை.
மது வரியை வைத்தே நாட்டை முன்னேற்றலாம். அந்தளவு அதிகமாக மது வரி இங்கு
அறவிடப்படுகின்றது என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




