273 பயணிகளுடன் இலங்கை வந்த விமானத்தில் வெளியேறிய புகை - கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கம்
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் சரக்கு பகுதியில் ஏற்பட்ட புகை காரணமாக நேற்று இரவு விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெருநிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவசரமாக தரையிறக்கம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் மெல்போர்ன் நகரில் இருந்து நேற்று இரவு 10.38 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட இந்த அவசர நிலை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக விமானி, கட்டுநாயக்க விமான நிலைய செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவசரத் தரையிறக்கத்திற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தீயணைப்பு வாகனங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மீட்புக் குழுவினர், அம்பியுன்ஸ்கள் மற்றும் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மருத்துவமனைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
களஞ்சிய அறையில் புகை
எனினும், விமானி எவ்வித அசம்பாவிதமும் இன்றி விமானத்தைக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

ஏர்பஸ் A-330 வகையை சேர்ந்த இந்த விமானத்தில் 258 பயணிகளும் 15 பணியாளர்களும் பயணித்துள்ளனர்.
விமானத்தில் கொண்டு வரப்பட்ட இறைச்சித் பொதிக்காக பயன்படுத்தப்பட்ட நைட்ஜன் உலர் பனியிலிருந்து இந்தப் புகை வெளியேறியிருப்பது விமானம் தரையிறக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விமானம் மேலும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மற்றொரு இலக்கை நோக்கிப் புறப்பட்டுள்ளது.