கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு மு.க. ஸ்டாலின் தீர்வை பெற்று தரவேண்டும்: இலங்கை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் கோரிக்கை
தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் உடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை கலந்துரையாடவுள்ளதாக அறிந்துள்ளோம். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து அத்து மீறி வந்து வட இலங்கை கடற்றொழிலாளர்களை பாதிக்கும் இழுவை மடி படகு தொடர்பாக கலந்துரையாடி அதற்கான தீர்வுகளையும் முன்னெடுப்பார் என வட இலங்கை கடற்றொழிலாளர்களாகிய நாம் எதிர்பார்க்கின்றோம் என வட இலங்கை கடற்றொழிலாளர்களின் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக வட இலங்கை கடற்றொழிலாளர்களின் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் பிரதிநிதிகள் சார்பாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் இன்று (16.08.2023) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
2 இலட்சம் மக்களின் வாழ்வாதாரம்
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் உடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை கலந்துரையாடவுள்ளதாக அறிந்துள்ளோம்.
இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து அத்துமீறி வந்து வட இலங்கை கடற்றொழிலாளர்களைப் பாதிக்கும் இழுவை மடி படகு தொடர்பாக கலந்துரையாடி அதற்கான தீர்வுகளையும் முன்னெடுப்பார் என வட இலங்கை கடற்றொழிலாளர்களாகிய நாம் எதிர்பார்க்கின்றோம்.
வட இலங்கையின் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்கள் இந்தக் கடற்றொழிலை தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். 30 வருட கால யுத்தத்தினால் சொல்ல முடியாத துயரங்களையும் அழிவுகளையும் நாங்கள் சந்தித்திருந்தோம்.
யுத்தம் காரணமாக வெளி மாவட்டங்களிலும் தென்னிந்தியாவிற்கும் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளையும் உயிர் மற்றும் உடைமை இழப்புக்களையும் சந்தித்திருந்தோம். யுத்தத்திற்குப் பின் எமது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மீள கட்டியெழுப்ப கடுமையாக முயற்சித்த போதிலும் பல சவால்களையும் தோல்விகளையும் நாம் சந்திக்க நேர்ந்தது.
வருமானத்தின் வீழ்ச்சி மற்றும் பெரும் கடன் சுமை காரணமாக எமது இளந்தலைமுறை கடற்றொழிலையே கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தத்திற்கு பின்பான இந்த சமூக பொருளாதார சூழலுக்கான முக்கிய காரணம் தமிழ்நாட்டு இழுவைப்படகுகள். இந்த இழுவைப்படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வலைகளை அறுத்து செல்வதால் பெரும் இழப்புகள் ஏற்படுகின்றன.
வளங்களை சுரண்டும் இழுவைப்படகுகள்
மேலும் சொத்து இழப்புக்களை தவிர்க்க நாம் இழுவைப்படகுகள் வரும் நாட்களில் கடலுக்கு போகாமல் இருப்பதால் பெருமளவான வருமானத்தை இழக்கின்றோம். கடல் வளங்களை சுரண்டும் இழுவை மடிகளால் சிறு கடற்றொழிலாளர்களின் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இழுவை மடி முறையால் வட இலங்கை மற்றும் தமிழ்நாடு சிறு கடற்றொழிலார்களின் எதிர்காலமே அழிக்கப்படுகின்றது.
பல போராட்டங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் பின்னர், 05 நவம்பர் 2016 அன்று இந்திய மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள், கடற்றொழில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட இணைந்த தீர்மானம் முக்கியமானது.
அந்த தீர்மானத்தில் “விரைவில் கீழ்மட்டத்தில் இழுத்து செல்லும் நடைமுறையினை முடிவுக்கு கொண்டு வருவது” மற்றும் “ரோந்து சுற்றுதலுக்கு ஒத்துழைப்பிற்கு சாத்தியங்களை ஆராய்ந்தறிதல்” என்ற முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
தமிழ் நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் 18ம் திகதி இடம்பெறவிருக்கும் மாநாட்டில், 05 நவம்பர் 2016 அன்று எடுக்கப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இழுவை மடி பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்.
மேலும் இழுவை மடி பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்காக இரு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு இடையில் 05 நவம்பர் 2016 அன்று எடுக்கப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் கலந்துரையாட நாம் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



