"எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையும் பாதிக்கும்"
எரிபொருள் நெருக்கடி காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையும் சிக்கலுக்கு உள்ளாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா (Harsha De Silva) தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
எரிபொருள் பிரச்சினை காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் A320/321 விமானங்களுக்கு குறுந்தூர பயணங்களுக்காக எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத சிக்கலை எதிர்நோக்க நேரிடும்.
குறுந்தூர பயணங்களுக்காக எரிபொருளை கொழும்பில் நிரப்பிக்கொள்ள வேண்டும் என்பதே இதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்நிய செலாவணி பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீவிர கவனத்தை செலுத்த வேண்டும்.
பெரிய கதைகளை கூறும் அஜித் நிவாட் கப்ராலின் திட்டங்கள் தொடர்ந்தும் தோல்வியடைந்து வருகின்றன எனவும் ஹர்ச டி சில்வா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.