ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை என்பதும், இயக்கப்படும் அனைத்து விமானங்களும் பல்வேறு நாடுகளில் இருந்து குத்தகை முறையின் கீழ் பெறப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளது.
இதுவரை காலமும் இரகசியமாக பேணப்பட்டுவந்த குறித்த தகவல் அமைச்சர் வாயிலாக வெளிவந்துள்ளமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கன் விமானங்களில் அண்மையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் தொடர்பில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் நேற்று(24.04.2023) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை
பொறியியல் பிரிவில் 25 வல்லுநர்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தொழில் வல்லுநர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொறியியல் துறைக்கு நிபுணர்களை ஆட்சேர்ப்பு செய்து விமானங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் உயர்மட்ட முகாமைத்துவம், பொறியியல் திணைக்களம், சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை, விமான நிலையம் மற்றும் விமான சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டது.