இலங்கை சில ஆண்டுகளில் சிங்கப்பூராக மாறும் - அமைச்சர் நம்பிக்கை
தற்போதைய அரசு நடைமுறைப்படுத்தி வரும் செயல்திட்டத்தின் கீழ், எதிர்வரும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக செயல்பட்டால், இலங்கையையும் ஒரு சிங்கப்பூராக மாற்ற முடியும் என ஒரு அரச உயர் அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன கூறியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளி நிலைமைகளுக்குப் பின்னர், பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒரு மூத்த அரச அதிகாரி, அரசின் செயல்பாடுகள் குறித்து திருப்தி அடைந்த நிலையில் இந்தக் கருத்துகளை தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், பதுளை மாவட்டத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்காக மட்டும் தன்னார்வ மனித உழைப்பாக சுமார் 86 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பங்களிப்பு கிடைத்துள்ளதாகவும், இது மிக உயர்ந்த மதிப்புடைய உதவி எனவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம், பொதுமக்களும் அரச அதிகாரிகளும் தற்போதைய அரசின் செயல்திட்டம் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருப்பது தெளிவாகப் புரிகிறது என்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டுள்ளார்.