சர்ச்சையை ஏற்படுத்திய பௌத்த தேரர் விவகாரம்: 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது! தேரர் பகிரங்க அறிவிப்பு
பௌத்த மதத்துறவிகள் எனும் ரீதியில் நாங்கள் காணொளிகளில் உள்ள சம்பவங்களை ஏற்றுக்கொள்வதில்லை என பகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
நவகமுவ விகாரையொன்றில் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்பட்ட காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலைகளில், பௌத்த மதகுரு ஒருவரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே நாட்டின் பௌத்தமதத்துறவிகளும், மக்களும் சரியான பாதையை பின்பற்றுமாறு நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
பௌத்தமதத்துறவிகள் எனும் ரீதியில் நாங்கள் காணொளிகளில் உள்ள சம்பவங்களை ஏற்றுக்கொள்வதில்லை.அண்மையில் நிகழ்ந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. அவை நன்கு திட்டமிடப்பட்டவை.
பௌத்த மதத்துறவிகளின் கௌரவத்தை குறைக்க சதி
சிவில் சமூகத்தின் மத்தியில் பௌத்தமதத்துறவிகளின் கௌரவத்தையும் , அதிகாரத்தையும் குறைப்பதற்காகவே இவை அரங்கேற்றப்படுகின்றன.
அரசசார்பற்ற அமைப்புகள் சில இதனை முன்னெடுப்பதுடன், அதற்கான பெருமளவு நிதியினை புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து பெறப்படுகின்றது.
இவ்வாறான திட்டமிட்டு நடாத்தப்படும் சம்பவங்கள் குறித்து கடந்த சில தினங்களாக தகவல்தொழில்நுட்ப துறையினருடன் கலந்துரையாடியுள்ளோம். இதன்மூலம் இந்த நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றதென்பதினை அறிந்துக்கொண்டோம்.
இவ்வாறான பௌத்த மதத்துறவிகளுக்கு எதிராக திட்டமிட்டு நடாத்தப்படும் சம்பவங்கள் குறித்து அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறித்து நாங்கள் வெட்கமடைகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |