இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகள் போலியான கோணத்தில் விசாரணை!தீபன் தீலீசன்
இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில் விசாரணையை செய்து முடிக்க வடமாகாண கல்வி அமைச்சும் வடமாகாண கல்வி திணைக்களமும் முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் தீலீசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மோசடி கும்பல்களை வைத்துக்கொண்டு வடமாகாண கல்வியை முன்னேற்ற முடியாது.பெற்றோர், பிள்ளைகளின் கையொப்பத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாட்டுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அரச பாடசாலைகளில் வசதிகள் சேவைக்கட்டணம் தவிர வேறெந்த நிதியோ, அன்பளிப்போ பாடசாலையால் வசூலிக்க முடியாதென சுற்றுநிரூபம் இருக்கும்போது அதையும் மீறி நிதி வசூலிக்கப்படும்போது அதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தபோதும் எந்த நடவடிக்கையும் இல்லை.
வடமாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வடமாகாண ஆளுநர் ஊடகங்கள் வாயிலாக கேட்டுக் கொண்டதற்கு இணங்க 100 பக்க முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தோம். அதற்கு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர். ஆனால் ஒரு வருடமாகியும் விசாரணை அறிக்கை தாமதமானது.
இந்நிலையில் வடமாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகவும் நிர்வாக ஆளுமையற்ற தன்மைகளை சுட்டிக்காட்டி வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக நாம் போராட்டத்தை முன்னெடுத்தோம்.
அதன் பின்னராக விசாரணைகளை
போலியான வகையில் முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது
என்றும் தெரிவித்துள்ளார்.