ஈழத்தமிழர் தாயகத்தில் மிளிரும் பண்பாட்டு வேர்கள் பற்றி வன்னியிற் கண்டவை!
ஒரு இனமோ அல்லது ஒரு சமூகமோ தொடர்ந்து பன்னெடுங்காலம் நிலைத்து வாழ்வதற்கு அதன் பண்பாடு ஆதாரமானது. பண்பாடற்ற சமூகம் அல்லது மனிதக்குழுமம் தொடர்ந்து இந்த பிரபஞ்சத்தில் நிலைத்திருக்க முடியாது.
இத்தகைய பண்பாடுதான் ஒரு இனத்தையோ, சமூகத்தையோ கூட்டிக்கட்டும் தொடுப்புச் சங்கிலியாகும். இந்தப் பண்பாடுதான் மக்கள் குழுமத்தை ஒரு நோக்கத்திற்காக குழுவாக அணிதிரட்டுகிறது.
அவ்வாறு அணி திரளும் போதுதான் தேசிய சமூகமாக கணிக்கப்படுகிறது. ஒரு சமூகம் தேசிய இனம் என்ற தகுதியை பெறுவதற்கு குறிப்பிட்டுச் செல்லக்கூடிய சில தகுதிகளை அந்த சமூகம் கொண்டிருக்க வேண்டும். அத்தகுதிகளாவன
1 வரையறுக்கப்பட்ட தெளிவான பாரம்பரிய வாழ்விட தாயகம்.
2 இனத்திற்கான பண்பாட்டுச் செழுமை
3 தெளிவான தொடர்ச்சி குன்றாத இனத்திற்கான வரலாறு
4 இனத்திற்கான பொதுப்பொருளாதார கட்டமைப்பு
5 செழிப்பான பொது மொழி, 6 தனித்து அரசமைத்து தன்னைத்தானே தானே ஆளுகின்ற முகாமைத்துவ ஆளுமை,
7) சர்வதேச சமூகத்துடன் உறவு கொள்ளக்கூடிய ராஜதந்திர அறிவு முதிர்ச்சிபோன்ற அம்சங்களைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு மக்கள் கூட்டம் தேசிய இனம் என்ற வரையறைக்குள் அடக்கப்படும்.
தேசிய இனத்தின் பாதுகாப்பு
எனினும் இந்த தகுதிகளுக்குள் மக்கள், நிலம் என்ற இரண்டும் மிக முக்கியமானவை. ஒரு தேசிய இனம் நிலத்தை இழந்தாலோ, அல்லது அந்த நிலத்தில் மக்களை இழந்தாலோ அது நிலைத்திருப்பதற்கான வாய்ப்புகள் அற்றதாகிவிடும். ஆகவே நிலத்தையும், மக்களையும் ஒரு தேசிய இனம் பாதுகாப்பது இன்றியமையாதது. அது தமிழ் தேசிய இனத்திற்கும் பொருந்தும்.
ஈழத் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் 15 இலட்சத்துக்கு மேல் புலம்பெயர்ந்துவிட்டார்கள். இது தமிழீழ மக்களின் மொத்த சனத்தொகையில் சுமாராக மூன்றில் ஒரு விகிதமாக உள்ளது. அவ்வாறே இலங்கை சுதந்திரத்திற்கு பின்னான காலத்தில் தமிழர் தாயகத்தின் நிலப்பரப்பில் குறிப்பிட்டுச் செல்லக் கூடிய பகுதிகள் சிங்கள குடியேற்றங்களால் விழுங்கப்பட்டுவிட்டன.
இப்போதும் தொடர்ந்து பௌத்த விகாரைகளுக்காகவும், விவசாய விருத்தி, மீள்குடியேற்றம் என்ற பெயரிலும் தமிழர் தாயகத்தின் எல்லையோரப் பகுதிகள் அபகரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
இவற்றினை தடுத்து நிறுத்தவும், ஈழத்தினுடைய சனத்தொகையை தொடர்ந்து பாதுகாப்பதும், சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கச் செய்வதும் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.
மக்களையும், நிலத்தையும் பாதுகாப்பதற்கு தமிழர்கள் தம் பண்பாட்டு வேர்களில் இருந்து தம்மை புதுப்பித்து மறுசீரமைத்து இன்றைய உலகளாவிய சமூகவியல் நீரோட்டத்தில் தம்மை பிரதியீடு செய்து பாதுகாப்பதற்கான அனைத்து கடமைகளையும் ஆற்ற வேண்டியுள்ளது.
அந்த வகையில் தமிழ் சமூகம் தேசிய சமூகமாக மலர்வதற்கு அதன் தொடர்ச்சி குன்றாத பண்பாட்டுச் செழுமை இன்றியமையாத பங்களிப்பை செலுத்த முடியும். அந்தப் பண்பாடு தான் தமிழ் மக்களை எப்போதும் ஒரு குடைக்குள் அணிதிரட்ட வல்லது.
பண்பாட்டு மூலக்கூறுகள்
அந்தப் பண்பாட்டின் மூலக்கூறுகளையும்,தன் கட்டுக்கோப்பையும் அதன் பற்றுறுதியையும் கடந்த இரண்டு மாத காலத்தினுள் யாழ்க்குடாவிலும், கிழக்கு மாகாணத்திலும், வன்னி பெருநிலப் பரப்பிலும், கோயில் விழாக்கள், கொண்டாட்டங்களின்போது பண்பாட்டின் வேர்கள் மிளிர்வதை காண முடிந்தது.
இப்பண்பாட்டு வேர்களிலிருந்து தமிழ் தேசியம் புதிய உத்வேகத்துடன் முளைவிடுவதற்கான அனைத்து அம்சங்களும் கடந்த இரண்டு மாத கால கொண்டாட்டங்கள் விழாக்கள் போன்ற நிகழ்வுகளின் ஊடாக உண்டு என்பதனை நிரூபிக்கின்றன.
அதனை ஒழுங்குபடுத்தி கட்டமைப்புச் செய்வதற்கான சமூக சூழலை சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள், பத்திரிக்கையாளர்கள், கலைஞர்கள், மதத் தலைவர்கள் என அனைவரும் ஒன்று இணைந்து செயலாற்றுவது அவசியமாகின்றது.
வன்னி பெருநிலப்பரப்பை பொறுத்த அளவில் வைகாசி மாதம் தொடங்கி ஆவணி வரை கோயில் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கான மாதங்களாகிவிடும். இந்த விழாக்கள் கொண்டாட்டங்கள் தமிழர் பண்பாட்டின் தொன்மையை அதன் சிறப்பை,மரபுரிமைகளை அடுத்த சந்ததிக்கு கடத்தக்கூடிய வகையில் ஒவ்வொரு வருடமும் நினைவூட்டிக் கொண்டிருக்கும். அத்தகைய வாய்ப்பை இந்த வருடம் நேரில் காணுகின்ற போது தமிழர் பண்பாட்டு வேர்களை எந்த சக்திகளாலும் அழிக்க முடியாது என்பதை உணர முடிந்தது.
வைகாசி மாதத்தில் வன்னி பெரு நிலப்பரப்பில் வன்னி விளாங்குளம், வற்றாப்பளை, கற்கிடங்கு, கல்லிருப்பு, பொட்குளம், குஞ்சுகுளம், கள்ளியடி, போன்ற இடங்களில் புராதன கண்ணகி அம்மன் ஆலயங்களின் திருவிழாக்களும் புதூர், புளியம்பக்கணை, இத்திமாடு போன்ற இடங்களின் நாதம்பிரான் கோயில் திருவிழாக்களும் இடம்பெறும். அத்தோடு புனித மடுமாதா தேவாலயத்தின் திருவிழாவும் மதம் கடந்து அனைத்து மதத்தவர்களையும் ஒருங்கிணைக்கின்ற ஒரு விழாவாக அமைவதையும் கருத்திற்கொள்ள வேண்டும்.
ஆவணி மாதத்தில் நடக்கும் மடுமாதா விழாவிற்கு வருகின்ற இலட்சக்கணக்கான பக்தர்களில் பெரும்பாலானவர்கள் சைவர்களும், பௌத்தர்களும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
கதிர்காம கந்தனுக்கு பாதயாத்திரை
கதிர்காம கந்தனுக்கு பாதயாத்திரை செல்பவர்கள் வன்னிவிளாங்குளம் அம்மன் கோயில் திருவிழாவில் ஆரம்பித்து வைகாசி விசாகத்தில் விசாக நாளன்று பற்றாக்குறை கண்ணகி அம்மன் ஆலய தரிசனத்துடன் வன்னியின் கிழக்குக் கடற்கரை ஓரச்சாலை வழியாக நடந்து இவர்கள் முருகன் கோயிலை அடைந்து அங்கிருந்து உகந்த முருகன் கோயில் சென்று வியாழன் வனவிலங்கு சரணாலயத்தின் ஊடாக கதிர்காம கந்தன் ஆலயத்தில் பாதயாத்திரை நிறைவு பெறுவதும் இந்தக் காலப்பகுதியே என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
இந்தப் பாதை யாத்திரை செல்லும் அனைத்து கோயில்களும் தமிழர் பண்பாட்டின் தொன்மையான வழிகாட்டு முறைகளைக் கொண்ட கோவில்கள் என்பதும், இங்கே சமஸ்கிருதமோ, ஆரிய வழிபாட்டு முறைகளோ அற்ற தமிழர் புராதன வழிபாட்டு முறைகளைக் கொண்டவை. இவ்விழாக்கள் தமிழர் தொன்மையின் மூலத்தை நமக்கு கோடிட்டு காட்டுகின்றன, வலியுறுத்துகின்றன, வழிகாட்டுகின்றன, எம்மை மீண்டும் மீண்டும் வழிப்படுத்துகின்றன.
தமிழ் சமூகத்தின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கண்ணகி அம்மன் வழிபாட்டு முறைகள் இந்த பிராந்தியத்தில் புராதன வழிபாட்டு முறைகளாகவும் சமஸ்கிருதம் அல்லாத பூசகர்கள் பரம்பரை பரம்பரையாக மேற்கொள்ளப்பட்டு வரும் வழிபாட்டு முறைகளாகவும் அமைந்து காணப்படுகின்றன.
இந்த வழிபாட்டு முறைகளுக்கு மக்கள் பெரும் பயபக்தியுடன் ஒன்று கூடி விழாக்களை நடத்துவதை காணலாம். குறித்த பகுதியின் திருவிழாக்கள் தொடங்கி விட்டால் அந்தப் பகுதியில் மக்கள் வேட்டைக்குச் செல்ல மாட்டார்கள், மாமிச உணவுகளை உண்ண மாட்டார்கள், மிகவும் பயபக்தியுடன் ஒன்று கூடி விழாக்களில் தாமும் பங்கெடுத்து விழாக்களை வெகு விமர்சையாக நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவதைக் காண முடியும்.
மேலும் தமிழ் சமூகத்தில் பல்வகைப் பட்ட சாதி பாகுபாடுகள் இருக்கின்ற போதிலும் இக்கோயில் திருவிழாக்களின் ஒவ்வொரு திருவிழாக்களும் ஒவ்வொரு சமூகத்துக்கும் என பங்கிடப்பட்டு இப்பிரதேசத்தில் வாழும் அனைத்து சமூகத்தினருக்கும் கோயில் திருவிழாக்களில் பங்கு உண்டு அந்தப் பங்குகளை அவரவர் தங்கள் நிலைக்கு ஏற்றவாறு முன்னெடுக்கும் வழக்கமும் இங்கு உண்டு கோயில் விழாக்களில் அன்னதானம், தாகசாந்தி நிலையம் போன்றவற்றை அமைத்து தானம் வழங்குவதில் ஆர்வம் காட்டுவதை காணமுடிகிறது.
தானங்கள் மிக உயர்ந்த மனிதப் பண்புகளை வெளிப்படுத்துவதையும் காணலாம். அவ்வாறு மக்களும் தம் உற்பத்திகளை நேத்திக்கடன் மூலம் கோயிலுக்கு தானமாக. வழங்குகின்ற வழக்கம் இங்கே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. இவ்விழாக்கள் இந்தப் பிரதேசத்தின் உற்பத்தி பொருட்களை வாங்க, விற்கக்கூடிய இடமாகவும் அமைகிறது. இவ்விழாக்களில் பலதரப்பட்ட வியாபாரங்களும் கூட்டுறவுகளும் ஏற்படும் இடமாகவும், மக்கள் ஒருவரையெருவர் சந்தித்து உறவாடக்கூடிய இடமாகவும் அமைகின்றது.
இதன் மூலம் மக்களை ஒரு வெகுஜன தொடர்பாடல்களுக்குள் உட்படுத்துகின்ற ஒருங்கிணைப்பு தளமாக இந்த விழாக்கள் அமைகின்றன. காவடி, கூத்து என கலை நிகழ்வுகளும், வரலாற்றைச் சொல்கின்ற ஏடு வாசித்தல் (கோயில் வரலாற்றை ஏட்டில் எழுதி வைத்து அதனை வாசித்துக் காட்டுதல்) போன்றவற்றின் மூலம் தமிழரின் தொன்மையும், வரலாற்றையும் எல்லோருக்கும் புகட்டப்படுகிறது.
இத்தகைய நிலையில் இந்த வருடம் வன்னி பெருநிலப்பரப்பில் ஒரு நூற்றாண்டை கடந்து கல்விச் சேவையாற்றி வரும் கனக ராயன்குளம் மகா வித்தியாலயம் தனது நூறாவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது.
இக்கொண்டாட்டத்தின் போது மூன்று மயில் நீளத்திக்கு ஒரு பண்பாட்டுப் பேரணியை நடத்திக் காட்டினார்கள். இந்தப் பண்பாட்டுப் பவணி என்பது வன்னியின் புராதன கலை இலக்கிய வடிவங்களை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருந்தது.
கோலாட்டம், கும்மி, சுலாகுநடனம், தீபநடனம், மயிலாட்டம், காவடி, ஏரொட்டி, பேய்ஓட்டி,பல்வகை கூத்துக்கள் என அனைத்து வகையான புராதன கால கலைப்படைப்புக்களும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டமை பெரும் பண்பாட்டுப் பேர் எழுச்சி உணர்வை ஏற்படுத்தியது. இத்தகைய பண்பாட்டுப் பேரணிகள் இனி வரும் காலங்களில் நூற்றாண்டு விழாக்களிலும், கோயில் விழாக்களிலும், கொண்டாட்டங்களிலும் ஏற்பட்டதற்கான தூண்டுதலை அளித்திருக்கின்றன.
பண்பாட்டு எழுச்சி பேரணி
இந்தப் பண்பாட்டு எழுச்சி பேரணியானது இனப்படுகொலையின் பின்பும் தமிழ் மக்களின் பண்பாட்டு வேர்கள் துளிர்விட ஆரம்பித்துவிட்டதற்கான அறிகுறிகளாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
இந்தக் காலப்பகுதியின் விழாக்கள் கொண்டாட்டங்களுக்காக புலம்பெயர் தமிழர்கள் தாயகத்துக்கு பெருமளவில் வருகை தந்து ஒன்று கூடுவதை அவதானிக்க முடிகிறது. அவர்களுடைய பெரும் நிதி பங்களிப்பையும் தாயகத்தின் விழாக்கள் கொண்டாட்டங்களுக்கு வழங்குவதையும் அவதானிக்க முடிந்தது.
இந்த அடிப்படையில் விழாக்கள் கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்படுகின்ற பெருந்தொகை நிதிகள் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் சமூகநல திட்டங்களுக்கும் பொருளாதார கட்டுமானங்களுக்கான முதலீடாகவும் மாற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அவற்றை சரிவர ஒழுங்குபடுத்துவது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.
புலம்பெயர் தமிழினத்தின் பொருளாதார கட்டுமானம் என்பது இன்று மிகப் பலமானது. அந்தப் பொருளாதாரக் கட்டுமானம் தாயகம் நோக்கி திரும்ப வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.
அத்தகைய பொருளாதார முதலீடுகளை தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு இத்தகைய விழாக்களும் கொண்டாட்டங்களும் மிக அவசியமாகவும் இருக்கின்றது. ஆனால் இத்தகைய புலம்பெயர் நிதி முதலீடுகள் எத்தகைய முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை ஒரு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்வது அவசியமாகும்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னர் புலம்பெயர் தேசத்திலிருந்து தாயகம் நோக்கி திருப்பப்பட்ட பெருந்தொகை நிதி முதலீடாக மாறாமல் நுகர்வாக மாறியது ““பாலைவனத்தில் பெய்த மழைக்கு““ ஒப்பாகி போய்விட்டது.
தமிழர்களின் பொருளாதார கட்டமைப்பு
அத்தகைய தவறுகள் எதிர்காலத்திலும் நடவாவண்ணம் தமிழினம் தன்னை தகவமைப்பச் செய்ய வேண்டும். இன்று ஈழத்தமிழர்களுடைய பெரும்பலம் என்பது புலம்பெயர் தமிழர்களின் பொருளாதாரக் கட்டமைப்பும் அவர்களுடைய மேற்குலக அரசியல் பலமும் தான். அந்த அடித்தளத்தில் இருந்து தான் தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கட்டுமானத்தை கட்டியமைக்க முடியும்.
அவ்வாறு தமிழ் தேசியக் கட்டுமானத்தை கட்டமைத்தால் மாத்திரமே தமிழர் தேசக்கட்டுமானத்தை கட்டமைக்க முடியும். முதலில் கட்டப்பட வேண்டியது தமிழ்த்தேசிய கட்டுமானம், அதன் அடுத்த படிதான் தமிழ் தேசக்கட்டுமானம். இந்த இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவாறு வலுவாக கட்டமைக்கப்பட வேண்டும்.
இத்தகைய தமிழர் தாயக நிலப்பரப்பில் நிகழும் பண்பாட்டு ஒன்று கூடல்களை தமிழ் சமூகத்தின் அரசியல் வாழ்விலும் பிரதியீடு செய்ய முடியும். தமிழினம் தன்னை தற்காத்துக் கொள்வதற்கு இத்தகைய பண்பாட்டு வேர்களை, பண்பாட்டு விழுமியங்களை தனது அரசியல் சமூக வேலைத்திட்டங்களில் பிரதியீடு செய்து வளர்த்தெடுக்க வேண்டிய காலகட்டத்தில் இன்று இருக்கின்றது.
வலுவான தொன்மையான பண்பாட்டினை கொண்டுள்ள தமிழ் சமூகம் இன்றைய காலத்திற்கும், இன்றைய சூழலுக்கும் இன்றைய சர்வதேச சூழலுக்கும் ஏற்ற வகையில் தன்னை தகமைத்துவ தம்மை நிலைப்படுத்த வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.