அறவழிப்போராட்டங்கள் கேலிக்குரியனவாகின்றனவா?

srilanka tamil protest politics peoples
By Jera Oct 20, 2021 06:39 AM GMT
Report
Courtesy: ஜெரா

தமிழ் தேசிய எழுச்சியின் அடித்தளம் அறவழிப் போராட்டங்களிலானது. தமிழர்களை அரசியல், சமூக, பொருளாதார, கல்வி ரீதியாக சிங்கள பௌத்தப் பெரும்பான்மை தேசியவாதம் ஒடுக்குமுறைக்குட்படுத்தத் தொடங்கிய காலம் தொட்டு இந்த அறவழிப்போராட்டங்களை தமிழர்கள் கையிலெடுத்தனர்.

ஊர்க் கோயிலின் தேர்த்திருவிழாவுக்குப் போவதைப் போல வேட்டியும், சேலையுமாக – குடும்பம் குடும்பமாகத் தெருவில் அமர்ந்து கோசமெழுப்பிப் போராடிய நாட்களை நம் வீட்டுப் 'பழசு'கள் நினைவு வைத்திருப்பதை அறிவோம். 'எதிர்ப்புப் போராட்டத்தில் நான் காற்சட்டையோடு முன்வரிசையில் இருந்து தந்தை செல்வாவின் உரையைக் கேட்டிருக்கிறேன்' என நினைவுபடுத்தும் முதியவர்கள்தான் நம்மிடையே அதிகம்பேர் உலாவுகின்றனர்.

மக்களின் கூட்டுணர்வினாலும், கூட்டு உழைப்பினாலும் சாத்தியப்பட்ட அறவழிப் போராட்டங்களை ஒன்றிணைத்த சக்தி துண்டுப் பிரசுரங்களுக்கும், தலைவர்களது உரைகளுக்கும், வாகன ஒலிபெருக்கி அழைப்புக்களுக்கும், எம்.ஜீ.ஆரின் திரைப் படப்பாடல்களுக்கும் இருந்தன. உணர்வுடன் கலந்து உயிராக இருந்த இத்தகையை அழைப்புக்கள் ஒவ்வொரு வீட்டின் சுவாமி அறைவரை பரவியது. இதனால் அறவழியில் ஒற்றுமையாகத் திரள்வதென்பது ஆன்மாவோடு கலந்தவொன்றாகியது.

தமிழ் தேசியத்தின் மீது ஏவப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட இத்தகையை கொண்டாட்டமிகு அறவழிப் போராட்டங்கள் முதல் நாற்பதாண்டுகளைத தனக்குள் வைத்திருந்தது. இனிமேல் அறவழிப் போராட்டங்கள் இதற்குத் தீர்வைத் தராது என உணர்ந்தபோதுதான் ஆயுதவழியைப் பற்றி தமிழர்கள் சிந்திக்கலாயினர்.

இந்தியத் தலையீட்டின் காரணமாக ஆயுதவழிப் போராட்டங்கள் ஆரம்பத்தில் சற்றுத் தளம்பினாலும், வெகுவிரைவாகவே சீர்நிலையை அடைந்தன. ஓரியக்கமாக, ஒரே கொள்கையின் கீழ் அடுத்துவந்த முப்பதாண்டுகளின் தமிழ் தேசிய தழைப்புக்கான பயணத்தைத் தனக்குள் வைத்திருந்தது. அந்த முப்பதாண்டு காலப்பகுதியில் கூட அறவழிப்போராட்டங்கள் மீது அதீத நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

தியாதி திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் அறவழிப் போராட்டத்திற்கே அடிப்படை வரைவிலக்கணம் கொடுத்ததாக அமைந்தது. கொண்ட கொள்கைக்காக உணவு, நீர் அருந்தாது உயிர்துறத்தல் சாத்தியமே இல்லை என்றபோது அதனை ஒரு போராட்டமாகவே செய்து சாத்தியப்படுத்தினார் திலீபன். அந்தத் தியாகத்திற்கு ஆதரவாக உணர்வு கொந்தளிக்க திரண்ட மக்களை யாராலும் தடுக்க இயலவில்லை. அதன் பின்வந்த மோசமான போர்க்காலங்களிலும், அவலம் வீட்டு வாசலில் வந்து நிற்கையிலும் மக்கள் தம் உரிமை மீட்புக்காக பதாகைகளுடன் தெருவில் நடந்து அறவழியின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தார்கள். இதன் உச்சமாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வுகள் அமைந்தன.

விடுதலை வேண்டி, உலகின் கவனத்தை முழுவதுமாகத் ஈழத்தமிழர் பக்கம் திருப்பிய பொங்குதமிழ் நிகழ்வுகள் இந்நூற்றாண்டின் மிகச் சிறந்த மக்கள அணிதிரட்டல் சந்தர்ப்பங்களாக அமைந்தன. உணவுப் பொதிகள் இல்லை, குடிநீர் போத்தல்கள் இல்லை, வருவோருக்கு ஒரு சதம் பணம் வழங்கப்படவில்லை, ஆனாலும் மக்கள் பேரலையாகத் திரண்டார்கள்.

திரும்பும் திசையெங்கும் ஒரே கோசத்துடன் எழுச்சிகாட்டினார்கள். இப்படியாக ஜனநாயக தளத்தில், அறவழியில் தமது பெருந்திரட்சியை வெளிப்படுத்திய தமிழர்களால் இப்போதெல்லாம் ஏன் அவ்வாறு திரள முடியவில்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

போர் முடிவுக்கு வந்த பின்னர் மக்கள் இத்தகையை போராட்டங்களில் சலிப்புற்று இருந்தார்கள் என்பதற்கு வலுவான காரணங்கள் இருப்பினும், அறவழியில் போராடும் சக்தியைக் கைவிட்டார்கள் எனக் குறிப்பிடவியலாது. போர் முடிவுக்கு வந்த காலம் தொட்டு மக்களாகத் தெருவில் இறங்கிப் போராடிய வலிகாமம் வடக்கு காணி மீட்புப் போராட்டங்கள், கேப்பாப்புலவு காணி மீட்பு மீட்புப் போராட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும் வருடக்கணக்கில் நீடிக்கும் காணாமலாக்கப்பட்டவர்களது உறவினர் நடத்தும் போராட்டங்கள் எனப் பலவற்றைக் குறிப்பிடலாம்.

காணாமலாக்கப்பட்டவர்களது போராட்டங்கள் தன் மகனுக்காக, மகளுக்காக, கணவனுக்காகத் தம் உயிரையே தியாகித்து நடத்துப்படுபவை. அத்தகைய உன்னதமிகு போராட்டங்கள் வேறெந்த இனங்களிலும் சாத்தியப்படாதவை. இவ்வாறு மக்களின் உணர்வு தளத்தில், அறிவுத்தளத்தில் அரைவாசிக்குக் கீழாக இறங்கிவிட்ட அறவழிப் போராட்ட உணர்வை ஓரளவுக்கேனும் மிதக்கும் நிலைக்கும் கொண்டுவர கூட்டெழுச்சி ஒன்று தேவைப்பட்டது.

அத்தகைய பொறுப்பை தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து 'எழுக தமிழாக' நிறைவேற்றும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதனை ஒழுங்குபடுத்துவதில் ஆரம்பம்தொட்டே இருந்த தளம்பல் நிலை எழுக தமிழிலும் வெளிப்பட்டது. லட்சம் பேர் வாழும் குடாநாட்டில் பத்தாயிரம் பேரை ஓரிடத்திற்குத் திரட்டுவதற்கே பெரும்பாடுபட்டது எழுக தமிழ் ஒழுங்கமைப்புக் குழாம்.

இடது காலை முன்வைப்பதா? வலது காலை முன்வைப்பதா என்பதில் அதனை ஒழுங்குபடுத்திய தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கு இருந்த குழப்பத்தை விளங்கிக்கொண்ட மக்கள் ஒதுங்கிக்கொண்டனர் என்பதே மிகச் சுருக்கமான கற்கை.

ஆகவே அறவழிப்போராட்டங்களை ஒழுங்குபடுத்துபவர்களின் ஒற்றுமையே அந்தப் போராட்டங்களின் வெற்றியைத் தீர்மானித்தன என்பது மிக இலகுவில் கண்டுகொள்ளக்கூடிய மீள்வாசிப்பின் முடிவு. வாக்கு வங்கிகளை வளப்படுத்துவதற்குள் தமது கொள்கைகளை வகுத்துக்கொண்ட தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடக்கும் அனைத்து ஜனநாயக வழி அறப்போராட்டங்களையும் வாக்குச் சேகரிப்புக்கான களங்களாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

சமூக ஊடகங்களின் தாக்கமும், ஊடக முதலாளிகள் பலர் அரசியல்வாதிகளாகியமையும் இந்த நிலைமையை மேலும் மோசமடையச் செய்கின்றது. அறவழிப்போராட்டங்களில் உயிர்ப்போடு பல்லாயிரம் பேர் கலந்துகொண்டிருந்தாலும், எங்கோ ஒரு மூலையில் செத்தேன்சிவனே என்று பாதகையைத் தலைகீழாய் பிடித்தபடி குந்தியிருக்கும் தமக்கு வேண்டியவர்களை ஊடகங்கள் முதன்மைப்படுத்துகின்றன.

போராட்ட முடிவில் ஒரு தொகுதி ஒலிவாங்கிகள் அவருக்கு முன்னால் வைக்கப்படுகின்றன. கூட்டாக நடத்தப்பட்ட போராட்டம் ஒரு தனி நபரின், கட்சியின் ஏகபோக உரிமையைப் பெறும்போது, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தம் உணர்வைக்கொடுத்து போராட வந்தவர்கள் சலிப்பைப் பெறுகின்றனர். அடுத்தடுத்த போராட்டங்களுக்கு அவர்களைக் காணக்கிடைப்பதில்லை.

இப்படியாக நலிவடைந்து நலிவடைந்து, தலைவரும், அவரிடம் அடுத்தடுத்த பதவிநிலைகளைப் பெற காத்திருப்போரும் மட்டுமே கலந்துகொள்ளும் வானவேடிக்கையாகத் தமிழ் தேசிய அறவழிப்போராட்டங்கள் மாறிவருகின்றன. உணர்வுமிகு மக்கள், அல்லது பிரச்சினையை எதிர்கொள்ளும் மக்கள் வெறும் வேடிக்கையாளர்களாக மட்டுமே போராட்ட மைதானத்தின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

உயிரைத் தியாகித்து ஆன்மாவோடு கலந்து வளர்க்கப்பட்ட அறவழிப் போராட்டங்கள் ஒத்திகை கூடப் பார்க்கப்படாத நாடகங்களாகத் தெருவுக்கு வந்துவிட்டன. இது வெறும் அரசியல் பகடையாட்டம். வாக்குப் பொறுக்குதலுக்கான பரப்புரை ஒத்திகை. இந்தப் பரப்புரை ஒத்திகை கேலிக்கைக்குள்ளாகுமே தவிர உரிய இலக்கை அடையாது.

மறுபுறமாக அறவழிப்போராட்டங்களையே இழிவுபடுத்தும். மேற்கண்ட விதத்தில் நடத்தப்படும் வானவேடிக்கைகளை விமர்சிப்போரும் அறவழிப்போராட்டத்தின் சக்தியை மலினப்படுத்தி வருகின்றமையை அவதானிக்கலாம். ஒரு விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான நாகரிகம், இத்தகையை போராட்டங்களை விமர்சிக்கும்போது கடைபிடிக்கப்படுவதே இல்லை.

தம் எதிரணியினரை விமர்சிக்கிறோம் என்ற பேரில் அவர்களை அவ்விடத்தில் குவியச் செய்திருக்கும் போராட்டக்கருவையும் சேர்த்தே கழுவியூற்றுகின்றனர். இத்தகையை கழுவியூற்றல், நாளைக்கு நமக்கும் இதுவே நடக்கும் என்ற கற்பிதத்தைப் இளையவர்களிடம் ஏற்படுத்துகிறது.

எனவே இத்தகையை கோராமிகு விமர்சனங்கள் அடுத்தடுத்த தலைமுறையினரையும் சுய அணிதிரள்விலிருந்து விலகியோடச் செய்கின்றன. இத்தகைய விமர்சனத் தரபின்னர் செய்யவேண்டியது, சரியான அணிதிரட்டளொன்றை மேற்கொள்வதுதான். அதற்குரிய வழிவகைகளைக் கண்டுபிடிப்பதுதான். ஆனால் 'சனம் வராது' என்ற வாய்ப்பாட்டையே இத்தகையை முன்வைப்புக்களுக்கு பதிலாக ஒப்புவிக்கின்றனர்.

அணிதிரட்டலை சாத்தியமாக்குவது எப்படி?

சத்தியாக்கிரகத்திலிருந்து பொங்குதமிழ் வரைக்கும் மீளக் கற்பதுதான் இந்தக் கேள்விக்குத் தரப்படும் ஒரே பதில். மக்களை அணிதிரட்டும் பொறிமுறை மிகச் சிக்கலுக்குள்ளானதாக மாறிவரும் இன்றைய நாட்களில் தேர்தல் காலத்தைக் கடந்தும் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள், எதிர்கால அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் பணியாற்ற வேண்டும்.

போர் முடிவுக்கு முன்பான காலத்தில் தமிழ் சமூகத்திற்குள்ளான உள்ளக ஊடாட்டம் (Inter dealing) மிக அதிகமாக இருந்திருக்கிறது. ஊர் கோவில் தர்மகர்த்தா சபை, நலன்புரி நிலையங்கள், வாசக சாலைகள், கிராமிய அபிவிருத்தி சங்கங்கள் என அனைத்தும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுடன் நெருக்கமான தொடர்பினைப் பேணியிருக்கின்றன. ஒரு துண்டு பிரசுரச் செய்தி ஒரு கிராமம் முழுமைக்கும் போதுமானதாக இருந்திருக்கின்றது.

எனவே நல்லதொரு செய்தியை சிறுவர் சிறுமியர் வரைக்கும் கொண்டு சேர்ப்பது மிக இலகுவானதாக இருந்திருக்கின்றது. இது ஒரு உதாரணம் மட்டுமே. இப்படியாக அணிதிரட்டலொன்றை சாத்தியப்படுத்துவதற்குப் பல வழிகளை சாத்தியாக்கிரகங்களும் பொங்குதமிழும் நாம் கற்க பாடங்களாக வைத்திருக்கின்றன.

இந்தப் பாடங்களைக் கற்று சரியான தரப்பொன்று தமிழ் சமூகத்தின் முன்பாக வந்தால் மாத்திரமே அறவழிப் போராட்டங்கள் கேலிக்கூத்துக்களாக்கப்படும் நிலைமை தடுக்கப்படும். காணாமலாக்கப்பட்ட தம் பிள்ளைகளுக்காக அவர்தம் உறவுகள் பசி கிடக்கின்றனர். பிணி கிடக்கின்றனர். உயிர்துடிக்க இறந்தும்போகின்றனர். அவர்களிடமிருக்கும் ஒரே நம்பிக்கை அறவழிப்போராட்டங்கள்தான். எனவே அத்தகையை தியாகங்களுக்காகவாவது....!

ஜெரா 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US