அம்பிகாவுக்கு ஆதரவாக உரக்கக் குரல் கொடுக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்!
மனித உரிமைகள் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு விமர்சித்து வெளியிட்ட அறிக்கைக்கு மத்தியில், சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் அவருக்கு ஆதரவை தெரிவித்துள்ளன.
சற்குணநாதன், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து கருத்து வெளியிட்டமையை அடுத்து, இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை துன்புறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் சமமானது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட எட்டு மனித உரிமைக் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் அறிக்கை, துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் போன்ற செயலை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. மனித உரிமைப் பாதுகாவலர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசாங்கத்தின் தந்திரோபாயங்கள் கண்டிக்கப்படவேண்டியவை.
இந்தநிலையில் தைரியமிக்க மனித உரிமைப் பாதுகாவலரான அம்பிகா சற்குணநாதனுக்கு தமது முழு ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக எட்டு மனித உரிமைகள் குழுக்கள், வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து துல்லியமான சாட்சியத்தை வழங்கியதற்காக அம்பிகா சற்குணநாதனை இலக்கு வைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
அத்துடன், தொடர்ந்தும் நிர்ப்பந்தத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து இலங்கை குடியியல் சமூகத்திற்கும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்களுக்கும் ஒரு அச்சமான செய்தியை இலங்கை அரசாங்கத்தின் இந்த செயல் உணர்த்தியுள்ளதாகவும் மனித உரிமைகள் குழுக்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்புசபை, மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான ஆசிய மன்றம், முன்னணி வரிசை பாதுகாவலர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பு, சர்வதேச நீதிபதிகள் ஆணையம், அனைத்து வகையான பாகுபாடு மற்றும் இனவெறிக்கு எதிரான சர்வதேச இயக்கம், மற்றும் சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு கூட்டு ஆகிய அமைப்புக்கள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் உட்பட இலங்கையின் சர்வதேச பங்காளிகள், இலங்கை அரசாங்கத்தின் அறிக்கையை பகிரங்கமாகக் கண்டிக்கவேண்டும்.
அத்துடன் சற்குணநாதனுக்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
அதேநேரம் இலங்கையின் குடியியல் சமூகத்துடன் பரந்த அளவில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை சர்வதேசம் அதிகரிக்க வேண்டும் என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சின், மனித உரிமை சட்டத்தரணியை இழிவுபடுத்தும் இந்த முயற்சியினால், அம்பிகா சற்குணநாதனின் துணிச்சலான பணிக்காக பழிவாங்கும் வகையில் உடல் ஆபத்துக்கள் ஏற்படுத்தப்படலாம்.
அம்பிகா சற்குணநாதனின் சாட்சியம், "ஒரு காலத்தில் சமூகங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசாரத்தை நினைவூட்டுகிறது என்று இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமையானது, நயவஞ்சகமானது மற்றும் ஆபத்தானது என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் மனித உரிமைகளுக்காக பாடுபடுபவர்களை "பயங்கரவாதத்தை" பின்பற்றுபவர்களுடன் பொய்யாக காட்டும் தொடர்ச்சியான நடைமுறையை இலங்கை அரசாங்கம் பின்பற்றி வருகிறது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட எட்டு மனித உரிமைக் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சற்குணநாதன் இலங்கையின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக இருந்தவர்,
இலங்கையின் சிறைச்சாலைகள் தொடர்பான முதல் தேசிய ஆய்வுக்கு தலைமை தாங்கினார்.
அதற்கு முன்னர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் சட்ட ஆலோசகராக பல வருடங்கள் கடமையாற்றினார்.
"போதைக்கு எதிரான போர்" என்ற சமீபத்திய அறிக்கையின் ஆசிரியரும் அம்பிகா சற்குணநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.



