ஜனாதிபதியின் வீட்டில் மாயமான விலையுயர்ந்த பொருட்கள்! திடீரென வந்த தொலைபேசி அழைப்பு
நாட்டில் இடம்பெற்ற போராட்டங்களின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிலிருந்து திருடப்பட்ட பொருட்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிலிருந்து திருடப்பட்டதாக கருதப்படும் விலை உயர்ந்த புத்தகங்கள், புத்தர் சிலை என்பன தொடர்பில், ஜனாதிபதி செயலகத்துக்கு நபரொருவர் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு தகவல் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
சி.ஐ.டி.யின் சிறப்புக்குழு தீவிர விசாரணை
இதன்போது அழைப்பினை ஏற்படுத்திய நபர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டின் மீது தீ வைக்கப்பட்ட போது திருடப்பட்ட புத்தகங்களும், புத்தர் சிலையொன்றும் பாதுகாப்பாக தன்னிடம் இருப்பதாகவும், அதனை வைத்திருக்க பயமாக இருப்பதனால் அதனை உடனடியாக கையளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பிலான தகவல்களை தெரிவிக்க ஜனாதிபதியின் செயலரை தொடர்புகொள்ள இணைப்பை ஏற்படுத்துமாறும் குறித்த நபர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் விடயத்தை ஜனாதிபதி செயலரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது, கடந்த ஜூலை 9 ஆம் திகதி தீ வைத்து அவரது கார் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.