சர்வகட்சி அரசாங்கம் அமைக்க ஆதரவு வழங்க தீர்மானம்: எம்.ஏ.சுமந்திரன்
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு ஜனாதிபதியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 பேர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களித்ததாக ஹரீம் பெர்ணாண்டோ கருத்து வெளியிட்டிருந்தார்.
பாரியதொரு குழப்பநிலை
இந்த நிலையில் அவர்களின் பெயர்களை வெளியிடுமாறு சவால் விடுக்கிறேன். நாட்டில் பாரியதொரு குழப்பநிலை நிலவுகிறது.
இதற்கு பொருளாதார சிக்கல் மற்றும் அரசியல் சிக்கலைக் காரணங்களாகக் கூறலாம். இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது. அவற்றை ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது.
இந்த விடயத்தில் பொருளாதார சிக்கல் ஆரம்பத்தில் வந்தபோது, சில கருத்துக்கள் தமிழ்ப் பிரதேசத்திலிருந்து வந்ததை நானறிவேன்.
இது தென்னிலங்கை பிரச்சினை எனக் கூறியவர்கள் இன்று அது முழு நாட்டுக்குமான பிரச்சினை என்பதை உணரத் தலைப்பட்டுள்ளனர்.
மத்திய அரசாங்கம் தான் நாடு முழுவதையும் நிர்வகிக்கிறது. மத்திய அரசாங்கத்தோடு தொடர்பில்லாமல் இருக்க வேண்டுமென கூறுவது பொருத்தமற்றதொன்று.
விசேடமாக அநீதிக்கெதிராகப் போராடும் நாங்கள் மற்ற மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை
நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை ஏற்படக் காரணம் வெளிநாடுகளிடமிருந்து கூடுதலாகக் கடன் பெற்றமையேயாகும்.
கடனை அடைப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 74 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் 2020 ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடன்பெற முடியாத நிலை ஏற்பட்டது.
கோட்டபாய ராஜபக்ச வரிச்சலுகையளிப்பதாகக் கூறினார். இதுவும் பொருளாதாரச் சிக்கல் உருவாக வித்திட்டது. இதன் காரரணமாகவே அவரை வெளியேறச் சொல்லி கோட்டா கோ கோம் உருவானது.
இந்நிலையில் மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து மே 9 இல் ஜனாதிபதியை நாட்டை விட்டு ஓடச் செய்தனர். இது நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் உருவானதல்ல. மாறாக மக்கள் உணர்வு வெளிப்பாட்டின் மூலம் அரங்கேறியது.
ஆட்சிப் பொறுப்பு
வன்முறையற்ற போராட்டமாக அரங்கேறியது இலங்கையில் மட்டும்தான். புத்தியைப் பாவித்து மேற்கொள்ளப்பட்ட போராட்டமாக அமைந்தது.
இந்த நிலையில் உலங்குவானூர்தியை தலைக்கு மேலாக, போராட்டம் இடம்பெற்ற போது பறக்கச் செய்து மக்களை அச்சமடையச் செய்யலாம் என ரணில் விக்ரமசிங்க நினைத்திருந்தார்.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் பட்டங்களைப் பறக்கச் செய்தனர். இதனால் உலங்குவானூர்திகள் அவ்விடத்தை விட்டு அகற்றப்பட்டன.
சரியான திட்டமிடலுடன், உரியவாறு செய்து முடிக்கப்பட்டுள்ளது. கத்தியின்றி, ரத்தமின்றி, நாடாளுமன்ற நடைமுறையுமின்றி மக்களால் உன்னதமாக நடத்தப்பட்ட போராட்டமாக உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவிடமிருந்து ஒரு செய்தி எமக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தது.
சர்வகட்சி ஆட்சி
அதன்படி நாட்டைத் தொடர்ந்து எம்மால் நிர்வகிக்க முடியாது விட்டால், ரணில் விக்ரமசிங்கவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்போம். சர்வகட்சி ஆட்சியென்பது அத்தியாவசியமானது என்பது நாங்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த தீர்மானமாகும்.
சர்வகட்சி ஆட்சியமைப்பதற்கு நாங்கள் தயார் என்று கூறியிருந்தபோதும் அது உண்மையான சர்வகட்சி ஆட்சியாக இருக்க வேண்டும்.
மொட்டுக்கட்சியின் பிடிக்குள் இருக்கும் ஆட்சியென்றால் அது சர்வகட்சி ஆட்சியில்லை. உண்மைத்துவமான சர்வகட்சி ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
சர்வகட்சி ஆட்சியமைப்பதற்கான அழைப்பு கடிதம் ஜனாதிபதியிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. சர்வகட்சிக்கு ஆதரவு வழங்குவதானது நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார சிக்கல்
இது ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கூடி பேசி எடுக்கப்பட்ட தீர்மானம். இதற்காக மீண்டும் ஒரு தடவை கூடவேண்டிய தேவையில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக தொடர்ந்து நானே செயற்பட்டுவருகின்றேன். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த பதவியில் தொடர்ந்து இருக்கவேண்டிய எந்த அவசியமும் எனக்கு இல்லை. நான் பதவி விலகுவதாக கூறிய போதிலும் நியமனம் செய்யப்படும் வரையில் பதவியில் இருக்கின்றேன்.
தற்போது ரணிலை எதிர்ப்பதாக விமர்சிக்கின்றனர். தமிழ் மக்களுக்கான ஏதாவது தீர்வினைப் பெற வேண்டும் என்பதற்காகவே முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.
நாங்கள் இன்னுமொரு ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதில்லை. இந்த பொருளாதார சிக்கல் காரணமாக எங்களுக்கு கட்டாயம் ஒரு சந்தர்ப்பம் வரும்.
பல வழிகளில் இன்று இனப்பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை இணைத்துக்கொண்டு முன்கொண்டு செல்ல வேண்டும். எதனையும் தட்டிக்கழித்து செல்ல முடியாது.
சிங்கள மக்கள் மத்தியில் முற்போக்கான சிந்தனையொன்று துளிர்விட்டுள்ளது. அதனை நாங்கள் சாதாரணமாக கொள்ள முடியாது.
அவர்களிடம் துளிர்விட்ட சிந்தனைதான் இந்த நாட்டில் பாரிய மாற்றத்தினைக் கொண்டு வந்துள்ளது. இந்த நாடு பொருளாதார ரீதியாக மீள எழும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சில விடயங்களை கொள்கை ரீதியாகவும் மீள் பரீசீலனை செய்ய வேண்டிய தேவையுள்ளது.
தமிழ் மக்களுக்கு விசேடமான தேவைகள்
தமிழ் மக்களுக்கு விசேடமான தேவைகள் உள்ளதன் காரணமாக அதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய தேவையுள்ளது. நாங்கள் செய்யாதவர்கள் அல்ல.
மாகாணசபை தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று கொள்கையுடன் இருந்தவர்கள். பின்னர் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு அமைச்சு பதிவிகளையும் பெற்றுக் கொண்டோம்.
மாகாணசபையினை புறக்கணித்த போதும் கொள்கை மாற்றத்திற்கான பேச்சுவார்த்தை கூட கட்சியில் நடத்தப்படாமல் அந்த பாரிய கொள்கை மாற்றம் செய்யப்பட்டது.
ஆகையினால் இருக்கின்ற சூழ்நிலையினை அவதானித்து கொள்கையினை மீள்பரிசீலனை செய்கின்ற சூழ்நிலை வரலாம் என குறிப்பிட்டுள்ளார்.