முக்கிய அரசியற்கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் முயற்சி! குமார் குணரட்னம்
2023 ஆண்டு இறுதியில் ராஜபக்ச, சஜித் அணி, தமிழ் தரப்பு ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கான முயற்சியில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டு வருகின்றார் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (17.12.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே கருத்துத் தெரிவித்திருந்தார்.
மேலும் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்

தமிழ் தரப்புக்கள் நம்பக்கூடாது
”2015 நல்லாட்சி காலத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகளை அவசரமாக தீர்ப்பது போன்ற தோற்றம் காட்டப்படுகின்றது. இதனைத் தமிழ் தரப்புக்கள் நம்பக்கூடாது. போராட்டத்தையே நம்பவேண்டும். ரணிலின் விளையாட்டுக்கு உடன்படக் கூடாது என தெரிவித்திருந்தார்.
இனவாதத்திற்கு எதிரான தன்மையை காலிமுகத்திடல் போராட்டத்தில் கண்டோம். ஆனால் தற்போது இன ஒற்றுமையை பிரிக்க முயற்சிக்கின்றனர்.
போராட்டத்திற்கு இடமளிக்கமாட்டேன் என ராஜபக்சவினருக்கு ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்துள்ளார். இராணுவம் பொலிஸ் புலனாய்வுத்துறை என்பன போராட்டத்தை அடக்க முனைப்பு காட்டுகின்றன.

போராட்டத்தை அடக்க முயற்சி
பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி போராட்டத்தை அடக்க முயல்கின்றனர். அது தொடர்பாக யாழ்ப்பாண மக்களுக்கு அனுபவம் உண்டு. சிங்கள மக்களுக்கு அது புதிதானது.
போராட்ட சக்திகளை பிரிக்க பல்வேறுபட்ட முயற்சிகள் எடுக்கப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தை இலக்கு வைத்து தனியார் பல்கலைக்கழகத்தை உருவாக்க முயற்சிக்கிறார். வரவு செலவுத்திட்டம் மூலம் ஒரு இலட்சம் வருமானம் பெறுபவரும் வரி செலுத்தும் நிலை உள்ளது.
அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றம் மூலம் செய்ய முடியாததை போராட்டம் மூலம் செய்ய முடிந்தது.

அதிகநேர மின்வெட்டு, வரி அறவீடு
அதிகநேர மின்வெட்டு, வரி அறவீடு போன்றவை 2023ம் ஆண்டில் ஏற்பட இருக்கும் போராட்டத்திற்கான அடிப்படைக் காரணங்களாக அமையும்.
நடுத்தர சாதரண மக்கள் பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மாணவர்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் ஆகியோர் கிளர்ந்தெழுவர்கள்.

தேர்தலொன்று நடந்தால் அதனுடன் இணைந்ததாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிய அரசியலமைப்பு கொண்டுவர வேண்டும்.
நாடாளுமன்றம் முறைமை இருக்கட்டும்.
மக்கள் அதிகாரம் கொண்ட மக்கள் சபை உருவாக்கப்பட வேண்டும். ஜூலை 9
போராட்டத்தில் இதனையே கண்டோம். பிரதேசவாரியாக இவை உருவாக்கப்பட
வேண்டும் என்று இதன் போது கருத்துத் தெரிவித்திருந்தார்.