யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம்
இனவாத சிங்கள தலைவர்கள் யாழ். நூலகத்தை எரித்தது மிகப்பெரும் தீங்கு என்று யாழ்ப்பாணத்தில் தர்ம உபதேசம் செய்கின்றார் அனுர குமார திஸாநாயக்க.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான முன்னகர்வு தாக்குதல் படைப்பிரிவுக்கு சிங்கள இளைஞர்களை இராணுவத்தில் இணைத்துக்கொடுத்ததில் பெரும் பங்காற்றியவர்கள் இன்று தேசிய மக்கள் சக்தி என்று அழைக்கப்படும் அன்றைய ஜே.வி.பி கட்சியினர் தான் என்பதை தமிழ் மக்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள் என்று எண்ணுகின்றாரா இந்த சாத்தான் அனுரகுமார திசாநாயக்க?
சிங்கள கடும் போக்காளர்களின் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட மகா நாடு கடந்த ஜூன் 25ம் திகதி யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. அங்கு ""சீரழிந்த தாயகத்தை கட்டி எழுப்புவதற்கான தீர்வு"" என்ற தலைப்பில் அந்த மகாநாடு இடம்பெற்றது.
யுத்தத்தின் விளைவு பற்றி தமிழ் மக்களுக்கு விளக்கம்
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க யுத்த அனர்த்தமும், யுத்தத்தின் விளைவும் பற்றி தமிழ் மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதனை தமிழில் உள்ள நாட்டுப்புற பழமொழியில் சொன்னால் ""பத்து பிள்ளை பெற்றவளுக்கு ஒருபிள்ளையும் பெற்றவள் முக்கி காட்டினாளாம்"" இப்படித்தான் பிள்ளை பெறுவது என்று. அப்படித்தான் அவரின் பேச்சை பார்க்கத் தோன்றுகிறது.
அத்தோடு நின்றுவிடாமல் இதற்கு மேலும் இன்னுமோர் படி மேலே சென்று தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு, ஒன்றுபட்டு ராஜபக்சக்களுக்கு எதிராக போராட வேண்டும் என்றும் கோரிக்கை வேறு விடுத்தாராம். இது என்ன கொடுமை! இதனை அநுரகுமார திசாநாயக்க என்ற சாத்தான் யாழ்ப்பாணத்தில் ஓதிய வேதம்”” என்று சொல்வது தான் பொருத்தமானது.
யாழ்ப்பாணத்தில் சிங்கள இடதுசாரிச் சாத்தான்கள் ஓதிய வேதம்
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இப்படித்தான் பல சிங்கள இடதுசாரிச் சாத்தான்கள் வேதம் ஓதியிருக்கின்றனர். தமிழ் ஆடுகள் நனைகின்றன என்று சிங்கள ஓநாய் ஒப்பாரிவைத்து அழுது புலம்பும் பாசாங்கு நிகழ்வுக்கு மத்தியில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் தமிழர் அரசியல் கட்சி தலைவர்களான மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற பிரமுகர்களும், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மற்றும் யாழ்ப்பாண இடதுசாரிகள் பலரும் அந்த மகாநாட்டில் கலந்துகொண்டு இந்தச் சாத்தான் ஓதிய வேதத்தை பருகினர் என்பது தான் வேடிக்கையானதும் அருவருப்பானதுமாகும்.
ஜேவிபி எனப்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணி இப்போது தன்னை தேசிய மக்கள் சக்தி என்று ஜனநாயக அரசியல் பேசுகிறது. கடும் போக்கு சிங்கள இடதுசாரிகள் தமிழ் மக்களுக்கு வேதம் ஓதுவது விந்தையானது.
இந்த ஜேவிபியின் வரலாறு எங்கிலும் தமிழ் மக்களுக்கு விரோதமான, படுகொலை அரசியலையே இவர்கள் எப்போதும் முன்னெடுத்ததையே வரலாறு பதிவு செய்துள்ளதை காணமுடியும்.
ஜேவிபியின் ஸ்தாபகத் தலைவரான ரோகண விஜயவீர தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு பற்றி எதையும் முன்வைக்காமல் கூடவே ஒற்றையாட்சி அரசியல் முறைமையைத்தான் முன்நிறுத்தினார்.
ரோகண விஜயவீர பற்றிய வரலாறு
இடதுசாரிகள் அரசு அமைத்தால் பிரச்சினைகள் தீர்த்துவிடும் என்ற போலி வார்த்தைகளையே கையிலெடுத்தார். அதுவே அவருடைய சித்தாந்தம்.
இத்தகைய ரோகண விஜயவீர பற்றி தமிழ் மாணவர் பேரவையின் பேச்சாளர் சந்ததியார் 1978 அக்டோபர் 30-ஆம் தேதி யாழ்.முற்றவெளி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசுகையில் ""தமிழ் மக்கள் ரோகண விஜய வீராவை நம்ப முடியாது அவர் தமிழ் மக்களுடைய சுய நிர்ணய உரிமையை ஏற்க தயார் இல்லை. அதனை அவர் மறுக்கிறார்"" என்று அன்று அவர் பேசியதை இங்கு நினைவில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.
1989 ம் ஆண்டு இறுதிப் பகுதியில் ஜேவிபி தலைவர் றோகண விஜேவீர கொல்லப்பட்டதன் பின்னர் கட்சியின் தலைமை பொறுப்பை சோமவன்ச அமரசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் "" சிங்கள உயர் குழாத்தின் அரசாங்கத்தில் பங்கு வகித்து அரச ஆதரவுடன் இனவாத, தமிழின எதிர்ப்பு வாதத்தை தீவிரமாக பேசி தமது கட்சியை பலப்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது"" என்ற ஒரு புதிய அரசியல் மூலோபாய வியூகத்தை வகுத்தார்.
புதிய அரசியல் மூலோபாய வியூகம்
இதன்படி அரசாங்கத்தின் பொலிஸ், இராணுவ ,நிர்வாக, நிதி பங்களிப்புடன் அரச வண்டி வாகன வசதிகளுடன் ஆளும் அரசாங்கத்தின் மேடை, ஊடகங்கள் என அனைத்தையும் பயன்படுத்தி அதி உச்சபட்ச இனவாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் பேசி தமிழின எதிர்ப்பு வாதத்தை பற்றி எரிய வைத்து, தமிழினப் படுகொலையை அரங்கேற்றி, அதன் மூலம் தமது கட்சியை சிங்கள மக்கள் மத்தியில் முதன்மைப்படுத்த முனைந்தார்கள்.
அந்த மூலோபாயத்தின் அடிப்படையில் தான்1994ம் ஆண்டு சந்திரிக்கா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்தில் வேலாண்மை- கால்நடை- காணி அபிரித்திய அமைச்சராக இந்த அனுரகுமார திசாநாயக்க ஆட்சியில் பங்கெடுத்தார்.
சந்திரிக்கா அரசாங்கத்தில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தத்தை முன்னின்று நடத்தியவர்களில் இவரும் ஒருவராவார். 1995ல் யாழ்ப்பாணத்தில் இருந்து ஐந்தரை இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து சொல்லணாத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்க இவர்கள் கண்டியில் ““ யாப்பாணபட்டன““ வெற்றிக்கொண்டாட்டத்திற்கு தலதாமாளிகையை அலங்கரித்தவர்கள் தான் இந்த ஜேவிபியினர்.
நல்லுார் பற்றி எரிவதை மகிழ்ச்சியுடன் பெருமைப்பாடிய சிங்கள இலக்கியம்
““ யாப்பாணபட்டன““ என்பது கோகுலசந்தேசய (குயில்விடுதூது) கிபி1450ல் 6ம் பராக்கிரமபாகுவின் படைத்தளபதி சப்புமல்குமாரய யாழ்ப்பா ஒத்தின் மீது படையெடுத்து நல்லுாரை தாக்கி அழித்தபோது நல்லுார் பற்றி எரிவதை மகிழ்ச்சியுடன் பெருமையாக ““ யாப்பாணபட்டுன”” என பாடும் சிங்கள இலக்கியம்.
2001ஆம் ஆண்டு ""அக்கினி கில"" படை நடவடிக்கையின் தோல்வியுடன் இலங்கைத்தீவில் இராணுவச் சமநிலையைப் புலிகள் ஏற்படுத்தினர். அச்சண்டையின் பின்னர் இலங்கை இராணுவம் சண்டையிடும் வலிமை குன்றி இருந்தது.
அந்தக் காலத்தில் ராஜபக்ச அணியினருடன் கூட்டுச்சேர்ந்து அவர்களின் செல்லப் பிள்ளையாக இவர்கள் மாறினர். அந்த சமாதான உடன்படிக்கை காலத்தில் இலங்கை இராணுவத்தை பலப்படுத்துவதற்காக இந்த ஜேவிபியினர் சிங்கள தேசத்தின் பட்டி தொட்டி எங்கும் சென்று இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அன்றைய காலத்தில், தென்பகுதியில் பல தொழிற்சங்கங்களும் மாணவரமைப்புகளும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களும், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் என அனைத்தும் ஜேவிபியினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன, இன்றும் இருக்கின்றன.
பாடசாலை மாணவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைவரையும் தம் கையில் வைத்துக்கொண்டு தமிழின எதிர்ப்பு பிரச்சாரத்தை அதி உச்சபட்சமாக செய்து இலங்கை இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பில் ஈடுபட்டவர்கள் இவர்கள்.அந்தப் படை திரட்டு நடவடிக்கையில் ""கிழட்டு சிங்கள சிங்கங்களினால் இளம்புலிகளை அழிக்கவோ, வெல்லவோ முடியாது.
""புலிகளை அழிக்க இளம் சிங்கங்களே வீறு கொண்டெழுக""
எனவே ""புலிகளை அழிக்க இளம் சிங்கங்களே வீறு கொண்டெழுக"" என்ற கோசத்தை முன்வைத்து மேடையில் முழங்கி , உசுப்பேத்தி பெருமளவிலான சிங்கள இளைஞர்களை இராணுவத்தில் இணைத்தனர். அந்த படை திரட்டலை முதலீட்டாக்கித்தான் 2005 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ராஜபக்சர்களுடன் இணைந்து அரசாங்கத்தின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி அதிக உச்சபட்ச இனவாதத்தை பேசி 39 நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
இனைத்தொடர்ந்து வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டது. தவறானதென்றும் 14-07-2006ல் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஜே.வி.பி. கட்சியினர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இதனையடுத்து உயர்நீதிமன்றின் அப்போதைய தலைமை நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட ஆயம் 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைய ஒன்றாக்கப்பட்ட இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லுபடியற்றது என்று அறிவித்தது.
மாகாணங்களை இணைத்த முறைமை தவறானது!உச்சநீதிமன்றம் தீர்ப்பு
அன்று பதவியிலிருந்த அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தன மாகாணங்களை இணைத்த முறைமை தவறானது என்றும் அது சட்ட ஒழுங்கு முறைக்கு முரணான வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்றும் காரணம் கூறி உச்சநீதிமன்றம் 16-10-2006ல் தீர்ப்பு வழங்கியது.
மாகாண சபை இணைப்பு பிழையானது என்று தீர்ப்பு வழங்கப்படவில்லை.மாறாக ஜனாதிபதி அதனை நாடாளுமன்றத்தின் வாயிலாக இணைக்காது அரச இதழ் வாயிலாக (வெர்த்தமாணி) அறிவித்தமை சட்ட நடைமுறைக்கு தவறானது என்று கூறியே வடக்கு-- கிழக்கு இணைப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
அதனை அடுத்து 2007 ஜனவரி முதலாம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டன. எந்தவிதமான அதிகாரங்களுமற்ற பெயரளவிலான ஓரு பிராந்திய அலகாக சொல்லக்ககூடிய இந்த மகாண சபை கூட தமிழ் மக்களுக்கு இருக்கக்வே கூடாது என்பதில் இவர்கள் குறியாகவே உள்ளனர்.
இங்கு "வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைத்த முறைமை தவறானது" என்று தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே அரசுத் தலைவர் இணைக்க வேண்டிய விதத்தில் இணைத்தால் அது அரசியல் சட்டத்துக்கு அமைய செல்லுபடியாகும் என்பது கவனிக்கத்தக்கது.
யுத்தத்தை முன்னின்று நடத்திய நபர்
சிங்கள தேசத்தில் ஜேவிபியினருக்கு ஏற்கனவே இருந்த அடித்தட்டு வர்க்க மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கினை பயன்படுத்தி ஏழைக் குடும்ப சிங்கள இளைஞர்களை இலங்கை இராணுவத்தின் முன்னணி நகர் படையாக ( Infantry) சண்டைக்கு அழைத்துச் சென்று முள்ளிவாய்க்காலில் இந்தப் பெரும் இனப்படுகொலை யுத்தத்தில் அப்பாவிச் சிங்கள இளைஞர்களையும் பலி கொடுத்து ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழினத்தவரை படுகொலை செய்த யுத்தத்தை முன்னின்று நடத்தி முடித்தனர்.
இந்த இரத்தம் குடித்த கறுத்தப் பூனைகளான ஜேவிபினர் இப்போது தங்களை சுத்த வெள்ளைப் பூனைகளாக காட்டி தமக்கு பாலும் குடிக்க தெரியாது என்று யாழ்ப்பாணத்தில் வந்து நின்று பாசாங்கு செய்கின்றனர். இவர்கள் குடித்த. தமிழ் இரத்தத்தை ஒரு போதும் மறைக்க முடியாது.
2005 ஆம் ஆண்டு ராஜபக்சக்களுடன் இணைந்து கடும் இனவாதம் பேசி 39 ஆசனங்களை பெற்ற இந்த ஜேவிபி அணியினர் இப்போது வெறும் 3 ஆசனங்களை மட்டுமே கொண்டிருக்கின்றனர்.
வங்குரோத்தாகி பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிங்கள அரசு
சிங்கள இனவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போரிட்டு ஈற்றில் பேரழிவை சந்தித்த தமிழர்கள் இன்றைய பொருளாதார நெருக்கடியை பற்றி அதிகம் பொருட்படுத்தவில்லை. மாறாக யுத்தத்தில் வெற்றி பெற்ற சிங்கள அரசுதான் வங்குரோத்தாகி பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
எனவே யுத்தமும், யுத்தத்தின் விளைவையும் இவர்கள் தமிழ் மக்களுக்கு சொல்வதை விட சிங்கள மக்களுக்கு இந்தப் போதனைகளைச் செய்து தமிழ் மக்களின் உரிமைகளை வழங்க முன்வந்து தங்களை தாங்களே திருத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை தாங்களே உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதுடன் அதற்கான குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும், பரிகாரங்களையும் முதலில் அவர்கள் என்பதே இங்கு முக்கியமானது.
39 லிருந்து 3 ஆக விழுந்து கிடக்கும் இவர்கள் தமிழ் மக்களுக்கு அறிவுரை சொல்லவந்துவிட்டார்கள்! இவர்களின் அரசியல் எங்கே போகின்றது என்பது தமிழ் மக்களுக்குத் தெரியாது என இவர்கள் நினைத்து விட்டார்களா?
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு
ரோகன விஜேய வீரவின் தலைமையிலான ஜேவிபி ஆயினும் சரி, சோமவேன்ஸ் அமரசிங்க தலைமையிலான ஜே.வி.பி ஆயினும் சரி தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கவும் இல்லை.
2014 ல் கட்சித்தலைமைப் பொறுப்பை ஏற்ற அநுரகுமார திசாநாயக்கவிடம் யாழ்ப்பாணத்தில் 2017ல் நடந்த மே தினக்கூட்டத்தில் வடக்கு – கிழக்கு இணைப்பு பற்றிக் ஊடகவியலாளர் வினவிய கேள்விக்கு வடக்கு – கிழக்கு இணைப்பு குறித்து கருத்து கூற முடியாது என பதிலளித்தமை இவர்களது இனவக்கிர அரசியலுக்கு தக்க சான்று. இப்போது அதே ஜேவிபி தன்னை நிறம் மாற்றிக்கொண்டு தேசிய மக்கள் சக்தி அன்று சொல்லிக்கொண்டு அதன் தலைவராக வந்து நின்று யாழ்ப்பாணத்தில் வேதமோதும் இந்த சாத்தான் அனுர குமார திசாநாயக்க தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இப்போதாவது ஏற்க தயாரா?