முக்கிய கூட்டங்களில் பசில்: ஆட்டங்காணுமா கொழும்பு அரசியல்...!
நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பெரும் நம்பிக்கைக்கு மத்தியில் பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவிக்கு வந்த போதும், தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது அவர் மீதான நம்பிக்கையை வலுவிழக்க செய்து விட்டதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
என்ற போதும் கூட பசில், நிதியமைச்சராக இருந்த போதோ அல்லது பதவியிலிருந்து விலகிய பின்னரோ நாட்டின் நிலைமை குறித்தோ அல்லது வேறு விடயங்கள் தொடர்பிலோ வாய்திறக்காமல் அமைதியாகவே இருந்து வந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் ராஜபக்சர்களில் பலர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், அவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் சமூக ஊடங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டு வந்தன. எனினும் குறித்த செய்திகளில் உண்மையில்லை எனவும் தெரியவந்திருந்தது.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நேற்றைய தினம் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச கலந்து கொண்டிருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்திருந்தார்.
அத்துடன், இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களில் எவரும் பசில் ராஜபக்சவுடன் ஒரே மேடையில் இருந்து அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் எந்தவித எதிர்ப்பையும் வெளியிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து, “மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை கருத்திற் கொண்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக தீர்மானம் எடுக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான நேற்றைய சந்திப்பின் போது பசில் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
அவ்வாறானதொன்று நடந்தால், புதிய அரசாங்கத்தின் புதிய பிரதமருக்கான வேட்புமனுக்களை கட்சித் தலைமைக் குழுவொன்று கோரினால், மகிந்த ராஜபக்சவைத் தவிர வேறு யாரையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிறுத்தாது என இதன்போது பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவே பிரதமர் பதவியை வகிக்க வேண்டும் என்பது கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்படுத்திய இணக்கப்பாடு எனவும், அந்த மக்கள் ஆணையைத் தவிர வேறு யாரையும் நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இல்லை” என பசில் ராஜபக்ச குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் கூறியிருந்ததாக மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியிருந்தது.
இதுநாள் வரையில் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து கூட வாய்திறக்காத பசில் பிரதமர் பதவி மற்றும் அடுத்த பிரதமர் குறித்த விடயங்களில் முன்னின்று செயற்படுவது தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் என்ற பதவிக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சி சார்பில் இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்கும் பசில், நாட்டின் பலம்பொருந்திய பதவியான நிதி அமைச்சர் என்ற பதவிக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கினாரா என்ற கேள்விகளும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
எது எவ்வாறு இருப்பினும் கொழும்பு அரசியலில் மிகப்பெரும் திருப்பம் காத்திருப்பதாக ஒருசிலரும், எதுவுமே மாறப்போவதில்லை என இன்னொரு தரப்பினரும் தமது வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
அத்துடன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்து வரும் நிலையில் கொழும்பு அரசியலை ஆட்டங்காண வைக்கப்போகும் முடிவை எடுக்கவுள்ள அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்ற கேள்வியும் வலம்வந்து கொண்டு தான் இருக்கிறது.
எனவே கொழும்பு அரசியலில் என்ன தான் நடக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
