விசேட கூட்டத்தில் திடீர் மாற்றம்! ஜனாதிபதி மாளிகை நோக்கி விரையும் அரசியல் முக்கியஸ்தர்கள் (Video)
ஜனாதிபதியுடனான விசேட கூட்டத்திற்காக ஜனாதிபதி மாளிகை நோக்கி அரசியல் முக்கியஸ்தர்கள் செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் ஊடகவியலாளர்கள் செல்ல முடியாத நிலை காணப்படுவதால் அவர்கள் சத்தம் வீதி (Chatham Street) பகுதியில் காத்திருக்கும் நிலையில் அப்பகுதியினூடாக கட்சித் தலைவர்கள் சிலர் ஜனாதிபதி மாளிகை நோக்கி செல்வதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
சகல கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியில் முழுமையாக இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்தார்.
அதன்படி பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் ஊடாக தெரியப்படுத்தியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி, அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்களுக்கும் ஆளும் தரப்பின் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் மாத்திரமே இன்று காலை ஜனாதிபதியின் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.