ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை; வடமாகாண ஆளுநர்
மாகாண சபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லையென வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில், அரச அதிபர் தலைமையில், அரச அதிகாரிகளுடன் நேற்று (15.11.) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்திலுள்ள குளங்களின் திருத்த வேலைகள் தொடர்பில் கலந்துரையாடினோம். அனைத்து குளங்களும் திருத்தப்பட வேண்டும். குளங்களின் நிலப்பகுதிகள் சில மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம்.
மேலும், கால்நடைகளுக்கு உணவு பிரச்சினை காணப்படுகின்றது. அதனை தீர்ப்பதற்கு என்ன செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.
அத்துடன் மாகாண சபை நிதிகளை, சரியான முறையில் செலவழிப்பதில்லை. எனவே, மத்திய அரசாங்கம், மாகாணசபை, ஆளுநர் அலுவலகம் என்பன இணைந்து நிதி தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். இந்நிலையில் இருக்கும் நிதிகளை சரியான முறையில் செலவு செய்ய திட்டமிட்டு வருகின்றோம்.
அரச உத்தியோகர்தர்கள் மக்களுக்கு சரியான முறையில் வேலை செய்ய வேண்டும். ஊழல் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் வேலை செய்ய முடியாது.
கடந்த காலத்தில் அல்லது தற்போது என்றாலும் கூட ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றால் உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும். சிலர் வேண்டுமென்றும் குற்றச்சாட்டுக்களை சிலர் மீது சுமத்தலாம். ஆனால் விசாரணை செய்யும் அதிகாரிகள் அதனை சரியாக முன்னெடுப்பார்கள். ஊழல் மோசடிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.