அமைச்சர்களின் அழுத்தத்தினால் இராஜினாமா கடிதத்தை இடை நிறுத்திய மகிந்த
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராகி வந்த நிலையில், இரு அமைச்சர்களின் தலையீட்டால் அவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சரவையின் இராஜினாமாவைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கடந்த 3 ஆம் திகதி செய்திகள் வெளியாகியிருந்த நிலையில்,இவ்வாறு வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்திருந்தது.இந்நிலையில், இது தொடர்பில் தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பைச் சுற்றியிருந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்ததாகவும்,பின்னர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் விடுத்த கோரிக்கைக்கு அமைய பிரதமர் தனது கருத்தை மாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்தால் தாமும் அரசியலில் இருந்து விலகுவதாக பிரசன்ன ரணதுங்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதன்போது பிரதமர் தனது இராஜினாமா கடிதத்தை வேறொரு இடத்தில் தயார் செய்து கொண்டிருந்ததால், சந்திப்பின் போது ஏற்பட்ட குழப்பத்தினால், இராஜினாமா கடிதம் தயாரிக்கும் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும், புதிய பிரதமரை நியமிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் அரசாங்கத்தின் 10 உறுப்பினர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



