அடுத்து வரும் வாரங்கள், மாதங்களில், இலங்கைக்கு எதிராக காத்திருக்கும் ராஜதந்திர சவால்கள்!
இலங்கை தொடர்பில் தமது மீளாய்வு அறிக்கையை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலட் இலங்கையின் பார்வைக்காக சமர்ப்பிக்கவுள்ளார்
நாளை திங்கட்கிழமையன்று இந்த அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து இலங்கை அரசாங்கம் குறித்த அறிக்கை தொடர்பான தமது கருத்தை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்காக இலங்கை அரசாங்கம், ஏற்கனவே சில முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது.
அதில், இலங்கையின் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் திருத்தங்களும் உள்ளடங்கியுள்ளன.
எனினும் இந்த மீள்திருத்தங்கள் போதுமானவையல்ல என்று ஏற்கனவே இலங்கையில் குறித்த சட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் -முஸ்லிம் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியமும், இந்த மீள்திருத்தங்கள் மேலும் முன்னேற்றங்கள் சேர்க்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டமைக்கு அமைய, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட இந்த திருத்தங்களில் மேலதிக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என்பதை அறிந்துக்கொள்ள முடியவில்லை.
இந்தநிலையில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி இலங்கை தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
எனினும் இந்த முறை வாக்கெடுப்பு எதுவும் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் செப்டம்பரில் இலங்கை மீதான மற்றும் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் இலங்கை, இராஜதந்திர ரீதியில் பாரிய சவால்களை எதிர்கொள்ளும் என்பதை உறுதியாக எதிர்பார்க்கலாம என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.



