அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பள பிரச்சினை: அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
சுகாதார சேவையை முறையாக பேணுவதற்கு ஒவ்வொரு தொழில் நிபுணரின் சேவையும் மிகவும் பெறுமதி வாய்ந்தது என்பதால், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார சேவை நிபுணர்கள், மக்களை கருத்தில் கொண்டு தமது பணிகளை மீள ஆரம்பிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இந்தகோரிக்கையை விடுத்துள்ளார்.
சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் கோரிக்கை தொடர்பில் தீர்வுகளை வழங்குவதற்கு வரையறுக்கப்பட்ட நிதி வசதிக்குள் நிதியமைச்சு முறையொன்றை முன்வைத்துள்ள போதிலும், வழங்கப்பட்ட தொகை தொடர்பில் தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் பெரும்பாலானவை வரியாக அரசாங்கத்திற்கே திருப்பிச் செலுத்தப்படும் எனவும், அதனால் அவர்களுக்கு அதிக பணம் கிடைக்காது எனவும் சுகாதார சேவை தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நிதியமைச்சு தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைத்து அரச ஊழியர்களும் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பின் கீழ் 5,000 ரூபா வழங்கப்படும் என்றும், அதற்கான முழுத் தொகையும் ஏப்ரல் மாதம் முதல் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |