வெளிப்படைத்தன்மையுடன் செயற்படத்தவறிய அரசாங்கம்:போராட்டத்திற்கான காரணத்தை வெளியிட்ட நாமல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் உரிய வெளிப்படைத்தன்மையுடன் செயற்படத்தவறியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலி முகத் திடல் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் மக்கள் ஏன் கோபித்துக் கொண்டுள்ளனர் என்பது தமக்கு புரிந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். கோப்படுவது மட்டும் தற்பொழுது பொருத்தமாகாது எனவும் தீர்வுகளை தேடுவதும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் நாடு குறித்த திட்டங்களை வெளிப்படையாக சொல்லியிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு எந்த விடயங்கள் பற்றியும் சொல்லப்படுவதில்லை என்பதே பிரதான குற்றச்சாட்டு எனவும் அதனை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலத்திற்கு பொருத்தமற்ற முகாமைத்துவ முறைமை காணப்படுவதாகவும், சிகப்பு நாடா முறைமை நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் போதியளவு வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை என்பதனை தாம் ஒப்புக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் மௌனம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வினை ஏற்படுத்தாது எனவும் ஜனாதிபதி உடனடியாக தனது திட்டங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச தனது பொருளாதாரத் திட்டங்களை பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் ஏன் போராடுகின்றனர் என்பது தமக்கு புரிவதாகவும் அவர்களின் போராடும் உரிமைக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் தொடர்ச்சியான போராட்டங்கள் நாட்டை மேலும் பிரச்சினைக்கு உள்ளாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.