எரிபொருள் விலை உயர்வு! இலங்கையை வந்தடையவுள்ள கப்பல்கள் தொடர்பில் அமைச்சரின் அறிவி்ப்பு
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டமை தொடர்பில் அரசாங்க தரப்பிலிருந்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் விளக்கமளித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக சந்தையில் விலை அதிகரிப்பு
"மார்ச் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் 37,000 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பலொன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. உலக சந்தையில் நிலவும் விலை அதிகரிப்பு இதிலும் உள்வாங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மார்ச் 25ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று வரவுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போதும் பாரிய நட்டத்துடனேயே செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 17 ஆம் திகதி அனுப்பப்பட்ட டெண்டரின்படி நாட்டிற்குக் கொண்டுவரப்பட வேண்டிய எரிபொருளின் அளவுகள் குறித்தும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கப்பல்கள் விபரம்
ஏப்ரல் 6,7,8 - 37,000 டொன் டீசல் எரிபொருள் கொண்ட இரண்டு கப்பல்கள்
ஏப்ரல் 12 மற்றும் 13 - 30,000 டொன் எரிஎண்ணெய் கப்பல்
ஏப்ரல் 10 மற்றும் 11 - 35,000 டொன் ஜெட் ஏ1 எரிபொருள்
ஏப்ரல் 16 மற்றும் 17 - 30,000 டொன் பெட்ரோல் எரிபொருள்
ஏப்ரல் மாதத்தில் வரவிருந்த 30,000 டொன் கச்சா எண்ணெய் கப்பல் வராது, அதற்கு பதிலாக ஜூன் மாதத்தில் 30,000 டொன் கச்சா எண்ணெய் கப்பல் வர திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு மத்தியிலும், ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவையும் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாவையும் அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இதற்காக அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 20 பில்லியன் ரூபாயைச் செலவிடுவதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படலாம்
இந்த முழு சுமையையும் அரசாங்கம் ஏற்க நேர்ந்தால், ஆண்டுக்கு கூடுதலாக $1.5 பில்லியன் செலவுச் சுமையை அரசாங்கம் ஏற்க வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது நடந்தால், எண்ணெய் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
“போரை யாராலும் கணிக்க முடியாது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் அல்லது அண்டை நாடுகளுக்கு ஓரிரு வாரங்களில் போர் முடிந்துவிடுமா என்று சொல்ல முடியாது. போர் கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்பதே எங்கள் நம்பிக்கை.
போர் நாளை முடிந்தாலும், குறிப்பாக பொருளாதாரம், எண்ணெய் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பில் ஏற்படும் தாக்கத்தைக் கருத்தில் கொள்ளும்போது, நமது பொருளாதாரத்தில் போரின் தாக்கம் ஒரே இரவில் முடிந்துவிடாது. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri