எரிபொருள் விலையில் மீண்டும் ஏற்படவுள்ள மாற்றம் - வெளியான அறிவிப்பு
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவதற்கு ஏற்ப, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (26) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் மானியம்
எரிபொருளுக்காக இதுவரை ரூ. 57 பில்லியன் மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மானியம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதன்படி, மீண்டும் மானியம் வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு பின்னர் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எந்த வகையிலும் பொதுமக்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்த தயாராக இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் கையிருப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்தமையினால், நாட்டில் எரிபொருள் விலைகளை அரசு சற்று உயர்த்த வேண்டியிருந்தது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இருப்பினும், உயர்த்தப்பட்ட எரிபொருள் விலைகள் மீண்டும் குறைந்து வருவதாகவும், அந்த விலையில் எரிபொருளை வாங்கும்போது பொதுமக்கள் பயனடையலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள மற்றும் அடுத்த இரண்டு மாதங்களில் வந்து சேரவுள்ள எரிபொருளானது, கடந்த மாதம் ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் என்பதால், எதிர்காலத்தில் ஆர்டர் செய்யப்படும் எரிபொருளுக்கான செலவை ஈடுசெய்து, அதன் பலன்களை மக்களுக்கு வழங்க முடியும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.