எரிபொருள் பதுக்கிவைப்பவர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் பெருந்தொகை பரிசு!பொலிஸார் கடும் எச்சரிக்கை
நாட்டில் தேவையற்ற முறையில் எரிபொருளை பதுக்கி வைப்பவர்களை கைது செய்வதற்காக நாடு தழுவிய ரீதியில் பொலிஸ் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று வரை எரிபொருளைப் பதுக்கி வைத்து வந்த 05 சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சந்தேகநபர்கள் கைது
நீர்கொழும்பு, ஸ்ரீபுர, பியகம, மல்வன மற்றும் மொனராகல பகுதிகளில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் போது இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக எரிபொருள் இருப்புகளைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ய சில குழுக்கள் செயல்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு எரிபொருளை பதுக்கி வைக்கும் நபர்கள் குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
பொலிஸ் மற்றும் இராணுவப்பாதுகாப்பு
தேவையற்ற முறையில் எரிபொருள் இருப்புகளைப் பதுக்கி வைப்பதால் நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், எரிபொருளைப் பெறுவதற்கு நீண்ட வரிசைகள் காணப்படுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே, அதிகளவில் எரிபொருள் இருப்புகளைப் பெற முயற்சிக்க வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், எரிபொருள் வரிசைகளில் அமைதியை பேணாத 7 பேரையும், சட்டவிரோதமாக எரிபொருள் பெற்ற நான்கு பேரையும் பொலிஸ் பிரிவு கைது செய்துள்ளது.
இதற்கமைய, எரிபொருள் நிலையங்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.